/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி, அரூர் பகுதியில் தொடர் மழையால் அவதி
/
தர்மபுரி, அரூர் பகுதியில் தொடர் மழையால் அவதி
ADDED : டிச 27, 2024 01:00 AM
தர்மபுரி, டிச. 27-
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் இதே நிலை தொடர்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பஸ் மற்றும் பைக்குகளில் வந்த அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், சாரல் மழையில் நனைந்தபடி பணிக்கு சென்றனர். மேலும், மழை தொடர்ந்து பெய்வதால், விவசாய நிலத்தில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள மரவள்ளி கிழங்கு, நெல் உள்ளிட்டவைகளை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், சாரல் மழையுடன் குளிர் காற்று வீசுவதால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குளிர்ந்த சீதோஷ்ண நிலையால், பலரும் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை முதல், பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால், தடுப்பணைகள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன், நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு கிராமங்களில் ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் அருகில் உள்ள வயல்களில் புகுந்ததால், அவை வெள்ளக்காடாக காட்சியளித்ததுடன், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஏற்கனவே பெஞ்சல் புயல் மற்றும் கடந்த, 12, 22 ஆகிய நாட்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்த நிலையில், நேற்று மீண்டும், பெய்த கனமழையால் நெல், மக்காச்சோளம், மஞ்சள், வாழை பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கனமழையால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். இதனால், அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சித்தேரி மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளன. அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் காலை நேரத்தில் பெய்த மழையால் சிரமத்திற்குள்ளாகினர். சாலையோர கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் விட முடியாமல் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.