ADDED : அக் 08, 2025 01:41 AM
தர்மபுரி, இந்தியா விடுதலைக்கு பின், முதன் முதலில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து கடந்த, 1965 அக்., 2ல் தமிழ்நாட்டில், 17-வது மாவட்டமாக தர்மபுரி உதயமானது. தர்மபுரி மாவட்டம், 60 ஆண்டுகள் நிறைவடைந்து, வைர விழா கொண்டாடும் விதமாக, நேற்று மகளிர் சுய உதவி குழுவினரின் பேரணி நடந்தது.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரியில் பேரணியை, மாவட்ட கலெக்டர் சதீஸ் தொடங்கி வைத்தார். இப்பேரணி நெசவாளர் காலனி பஸ் ஸ்டாப் வழியாக, தர்மபுரி நான்கு ரோட்டில் நிறைவடைந்தது. தொடர்ந்து, வைர விழாவை கொண்டாடும் விதமாக, நடந்த கலைநிகழ்ச்சிகளை கலெக்டர் சதீஸ் பார்வையிட்டார்.
இதில், மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, தர்மபுரி தாசில்தார் சவுகத்அலி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினார்கள் பங்கேற்றனர்.
நினைவேந்தல் நிகழ்ச்சி
அரூர், அக். 8
தமிழகம்- கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில், கடந்த, 2023 அக்., 7ல் பட்டாசு கடை மற்றும் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், தீயில் கருகி, 14 பேர் உடல் கருகி பலியாகினர். இதில், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த வேடப்பன், முனிவேல், இளம்பருதி, ஆகாஷ், ஆதிகேசவன், விஜயராகவன், கிரி ஆகிய, 7 பேர் உயிரிழந்தனர். இவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஊர்மக்கள் சார்பில், இறந்தவர்களின் நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.