/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வன விலங்கு பீதியில் பஞ்சப்பள்ளி விவசாயிகள் குடில்களில் காவல் காக்கும் துயரம்
/
வன விலங்கு பீதியில் பஞ்சப்பள்ளி விவசாயிகள் குடில்களில் காவல் காக்கும் துயரம்
வன விலங்கு பீதியில் பஞ்சப்பள்ளி விவசாயிகள் குடில்களில் காவல் காக்கும் துயரம்
வன விலங்கு பீதியில் பஞ்சப்பள்ளி விவசாயிகள் குடில்களில் காவல் காக்கும் துயரம்
ADDED : ஆக 29, 2011 11:43 PM
தர்மபுரி :மாரண்டஹள்ளியை அடுத்த பஞ்சப்பள்ளி சின்னாறு வனப்பகுதியில் வன விலங்குகள் பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
இரவு நேரங்களில் தோட்டங்களில் தீ பந்தங்களுடன் காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காவிரியின் துணை நதியான சின்னாறு மற்றும் தென்பெண்ணையாற்று படுகை பகுதியில் விவசாயம் எப்போதும் செழிப்பாக இருக்கும். தென்பெண்ணையாற்று படுகை பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் குறைவு என்பதால், இப்பகுதியில் சிறு வன விலங்குகள் தொல்லைகள் இருந்த போதும், அவற்றை விவசாயிகள் கட்டுப்படுத்தி விவசாயிகள் மகசூல் எடுத்து வருகின்றனர்.
காவிரியின் துணை நதியான சின்னாறு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக தர்மபுரி மாவட்டத்தின் வட எல்லையான பஞ்சப்பள்ளியில் இருந்து பென்னாகரம், ஒகேனக்கல்லுக்கு சென்று மீண்டும் காவிரியில் கலக்கிறது. சின்னாறு படுகை பகுதியின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய இரு தாலுகா பகுதிகளின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பெறப்படுகிறது. வட கிழக்க பருவ மழையை அடிப்படையாக கொண்டு சின்னாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும். சின்னாற்றின் மூலம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் பஞ்சப்பள்ளியில் அணை கட்டப்பட்டு மாவட்டத்தின் பல ஞூவேறு ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சின்னாற்றின் மூலம் வளம் கொழிக்கும் பஞ்சப்பள்ளி கிராமம் மேற்கு மலை தொடர்ச்சியின் அடிவாரப்பகுதியில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை மற்றும் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை அடர்ந்த வனப்பகுதியின் தொடர்ச்சியாக உள்ளது. பஞ்சப்பள்ளி கிராமத்தில் கடந்த காலங்களில் வன விலங்கு தொல்லைகள் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. சமீப காலமாக வனப்பகுதியில் உள்ள குவாரிகளில் வைக்கப்படும் வெடி சத்ததை கேட்டு மிரண்டு போகும் வன விலங்குகள் கிராம பகுதியில் உள்ள வயல் வெளிகளை நோக்கி படை எடுக்க துவங்கியுள்ளது.
சின்னாறு படுகையில் நீர் பற்றாக்குறை மற்றும் கோடை காலங்களில் ஏற்படும் தீவன பற்றாக்குறை காலங்களில் யானைகள் கூட்டம், கூட்டமாக இடம் பெயர துவங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். தற்போது, ஆடிப்பட்டத்தில் பஞ்சப்பள்ளி, புதூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நெல், மஞ்சள், நிலக்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.
இரவு நேரங்களில் அதிக அளவில் இப்பகுதியில் காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து, கடலை செடிகள் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் குடில் அமைத்து இரவு நேரங்களில் காவல் காத்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் தீப்பந்தங்கள் எந்தியும், பல்வேறு ஓசைகள் எழுப்பியும் காட்டு பன்றிகளிடம் இருந்து நிலங்களை பாதுகாத்து வருவதோடு, வயல்வெளிகளில் கம்புகளை நட்டு அவற்றில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் தாள்களை தொங்க விட்டுள்ளனர். ''பிளாஸ்டிக் தாள்கள் காற்றின் அசைவுக்கு சத்தம் எழுப்புவதால், இரவு நேரங்களில் வயல் வெளியை நோக்கி வரும் வன விலங்குகள் மக்கள் நடமாட்டம் இருப்பதாக நினைத்து திரும்பி சென்று விடுவதாகவும், சிறு வன விலங்ககுளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்து கொள்ள இது வசதியாக உள்ளதாகவும், யானை உள்ளிட்ட விலங்கினங்கள் வந்தால் தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு வெடித்தும் விரட்டி வருவதாக,'' பஞ்சப்பள்ளியை சேர்ந்த விவசாயி பெருமாள் தெரிவித்தார்.