ADDED : பிப் 23, 2024 04:33 AM
'தமிழகத்தின் 234 தொகுதிகளிலும்
தேர்தல் அலுவலகங்கள் திறப்பு'
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவில் தொடர்பாக நடந்த சம்பவத்தில் பதிவான வழக்கில், நேற்று பா.ஜ., மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், தர்மபுரி மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பின், தர்மபுரியிலுள்ள, பா.ஜ., கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சட்டசபை தொகுதி அளவில், பா.ஜ., தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. வரும், 29ம் தேதிக்குள், 234 தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்படும். தேசத்தின் பாதுகாப்பு, வளர்ச்சி, வலிமைக்காக, 24 மணி நேரமும் மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார். மோடி மீண்டும், பிரதமராவது உறுதி. வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், பா.ஜ., பெரும்பான்மை இடங்களை பிடிக்கும். பொதுமக்களை திசை திருப்ப விவசாயிகள், தேவையின்றி டில்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக, தர்மபுரி சட்டசபை தொகுதி, பா.ஜ., அலுவலகத்தை திறந்து, கட்சிக்கொடியை ஏற்றினார். மாவட்ட பொதுச்செயலாளரும், தர்மபுரி சட்டசபை தொகுதி பொறுப்பாளருமான ஐஸ்வர்யம் முருகன், மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பார்வையாளர் முனிராஜ், தர்மபுரி மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
தேசிய போட்டிக்கு அரூர் மாணவர் தேர்வு
அரூர்: கன்னியாகுமரியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி கடந்த, 20ல் நடந்தது. அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் நடந்த போட்டியில், ஜூனியர் பிரிவில், தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 7ம் வகுப்பு மாணவர் சுமன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும், தேசிய அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் சுமனையும், அவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, சங்கர், முருகேசன், வெங்கடாசலம் மற்றும் சுரேஷ் ஆகியோரை, தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
'உங்களை தேடி உங்கள் ஊரில்'
பாப்பாரப்பட்டியில் திட்ட முகாம்
தர்மபுரி, பிப். 23-
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம், கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
இதில், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன ஏரியில் அம்ரூத், 2.0 திட்டத்தில், 2.24 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாடு செய்தல் பணிகள் நடப்பதை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு முறையாக ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்பட வேண்டுமென, பேரூராட்சி பணியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 2.74 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் வாரச்சந்தை மேம்பாடு பணிகள் மற்றும் ஆவின் கொள்முதல் நிலையத்தையும் அவர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., காயத்திரி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பத்ஹூமுகமதுநசீர், பென்னாகரம் தாசில்தார் சுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.