ADDED : ஏப் 30, 2025 01:27 AM
தர்மபுரி:
பாலக்கோடு அருகே இன்று நடக்கும், தே.மு.தி.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, வெள்ளிச்சந்தையிலுள்ள கே.வி., மஹால் திருமண மண்டபத்தில் இன்று, தே.மு.தி.க., தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் இன்று நடக்கவுள்ளது.''
இதில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள், அவைத்தலைவர்கள், பொருளாளர்கள், மகளிரணியினர் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் என, இதில், 3,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக, பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதில், கட்சியின் எதிர்கால அரசியல் குறித்த முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள், தமிழகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்த முக்கிய தீர்மானங்கள் மற்றும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு, கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.