ADDED : ஜூலை 02, 2025 02:13 AM
தேன்கனிக்கோட்டை, ஆலஹள்ளி வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலையில் வெளியேறிய, 3 யானைகள், கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.
கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக் கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலஹள்ளி, மரக்கட்டா, ஏணிமுச்சந்திரம், தாவ ரக்கரை, கேரட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில், தனியாகவும், கூட்டமாகவும் மொத்தம், 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில், வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
அதன்படி நேற்று அதிகாலையில், ஆலஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 3 யானைகள், கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. அங்கு விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் வனப்பகுதி நோக்கி சென்றன. யானைகளால் பயிர்கள் தொடர்ந்து சேதமானதால், விவசாயிகள் கவலை அடைந்தனர். சேதமான பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், யானைகளை கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் எனவும், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.