/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை நடுவே மின் கம்பம் அகற்றாமல் விரிவாக்க பணி
/
சாலை நடுவே மின் கம்பம் அகற்றாமல் விரிவாக்க பணி
ADDED : ஆக 06, 2024 08:47 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி வரை சாலை விரிவாக்க பணியில், சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பதை அகற்றாமல் அப்படியே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல், சேலம் அயோத்தியாப்பட்டணம் வரை, 4 வழிச்சாலை அமைக்கப் படுகிறது.
முதல் கட்டமாக வாணியம்பாடி முதல், தர்மபுரி மாவட்டம் அரூர் -- ஏ.பள்ளிப்பட்டி வரை, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடக்கிறது. இவ்வழியாக தினமும், 1,000க்கும் மேற்பட்ட பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இதையடுத்து ஏ.பள்ளிப்பட்டி முதல், மஞ்சவாடி கணவாய் வரை சாலையை விரிவுபடுத்தி, 4 வழிச்சாலை அமைக்க, மத்திய அரசு, 170 கோடி ரூபாய் ஒதுக்கியது. சாலை அமைக்கும் பணி கடந்த, 6 மாதங்களாக நடக்கிறது. அதற்காக சாலையில், 53 கல்வெட்டுகளும், ஒரு பாலம் அமைத்தும், சாலை அகலப்படுத்தும் பணியும் நடக்கிறது. அதிகாரப்பட்டி அருகே சாலையின் குறுக்கே மின் பாதை செல்கிறது. அதற்காக சாலை நடுவே மின்கம்பம் அமைந்துள்ளது. இதை அகற்றாமல், அப்படியே சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து சாலை பணி மேற்கொள்வோர் கூறுகையில், 'பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விட்டோம். ஆனால், அவர்கள் சாலை நடுவே செல்லும் இந்த மின்கம்பத்தை அகற்ற, எங்களுக்கு முறையான அனுமதி கிடைக்கவில்லை எனக்கூறி காலதாமதம் செய்து வருகின்றனர். பல இடங்களில் மின்கம்பம் அகற்றப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் அகற்ற மின்வாரிய அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், சாலை அமைக்கும் பணி தாமதமாகிறது. இருந்த போதிலும் பணியை நிறுத்த முடியாமல் தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நடக்கிறது' என்றனர்.