/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை வலியுறுத்தி போராட்ட அனுமதிக்கு ஆர்.டி.ஓ., ஆபீசில் குவிந்த விவசாயிகள்
/
கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை வலியுறுத்தி போராட்ட அனுமதிக்கு ஆர்.டி.ஓ., ஆபீசில் குவிந்த விவசாயிகள்
கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை வலியுறுத்தி போராட்ட அனுமதிக்கு ஆர்.டி.ஓ., ஆபீசில் குவிந்த விவசாயிகள்
கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை வலியுறுத்தி போராட்ட அனுமதிக்கு ஆர்.டி.ஓ., ஆபீசில் குவிந்த விவசாயிகள்
ADDED : அக் 15, 2024 02:58 AM
கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை வலியுறுத்தி
போராட்ட அனுமதிக்கு ஆர்.டி.ஓ., ஆபீசில் குவிந்த விவசாயிகள்
அரூர், அக். 15-
கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, தாங்கள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி, அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குவிந்தனர்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மொத்தம், 17.35 அடி உயர தடுப்பணையின் மூலம், 6,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மழைக்காலங்களில் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, நீரேற்று திட்டம் வாயிலாக மொரப்பூர், நவலை, கம்பைநல்லுார், செங்குட்டை, சின்னாகவுண்டம்பட்டி, கடத்துார், சிந்தல்பாடியிலுள்ள, 66 ஏரிகளை நிரப்ப, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
போராட்ட அறிவிப்பு
இதையேற்று கடந்த, 2019 ஜூலையில், இது குறித்து ஆய்வு செய்ய, 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியது. ஆய்வு நடத்தி அரசிடம் திட்ட வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்துக்கு கடந்த, 2020 பட்ஜெட்டில், 410 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கிடப்பிலுள்ள இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, நேற்று முதல், மொரப்பூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என, மொரப்பூர் நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆலோசனை கூட்டம்
இதற்காக கடந்த, 12ல் மொரப்பூரில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் பந்தல் அமைக்கும் பணி நடந்தது. அங்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே, பந்தலை அகற்றுவதுடன், 14ல் அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகரை சந்திக்குமாறு கூறிச்சென்றனர். இதையடுத்து, நேற்று காலை, 11:50 மணிக்கு, 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு, ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமையில், அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
சட்ட ரீதியாக
அதில் பேசிய, மொரப்பூர் நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஜெயபால், பிரபாகரன், சுரேஷ் மற்றும் சந்தோஷ் உள்ளிட்டோர், 'கே.ஈச்சம்பாடி நீரேற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, தாங்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு ஒரு வாரத்திற்குள் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். அனுமதி வழங்கா விட்டால் சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.
இதற்கு பதிலளித்த பேசிய ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், ''2024-25ல் கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தினால், 643 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் விவசாயிகளின் போராட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்'' என்றார். இதையடுத்து, விவசாயிகள், 2:00 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
போலீசார் மிரட்டல்
போராட்டம் நடத்த இடம் வழங்கிய விவசாயியிடம், 'போராட்டம் நடத்த அனுமதி அளித்தால் உங்கள் மீதும், மகன் மீதும் வழக்கு பதியப்படும்' என்றும், பந்தல் அமைத்தவரிடம், 'அரூர் பகுதியில் இனி எங்கும் பந்தல் அமைக்க முடியாது' என, போலீசார் மிரட்டியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.