/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரியில் செத்து மிதந்த மீன்கள் மீன்வளத்துறையினர் ஆய்வு
/
ஏரியில் செத்து மிதந்த மீன்கள் மீன்வளத்துறையினர் ஆய்வு
ஏரியில் செத்து மிதந்த மீன்கள் மீன்வளத்துறையினர் ஆய்வு
ஏரியில் செத்து மிதந்த மீன்கள் மீன்வளத்துறையினர் ஆய்வு
ADDED : செப் 30, 2025 02:15 AM
நல்லம்பள்ளி, நல்லம்பள்ளி அருகே, கோம்பேரி ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, மிட்டாரெட்டிஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கோம்பேரியில், 20 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இதை அதே பஞ்., சேர்ந்த பசுவராஜ் என்பவர், 3 ஆண்டுக்கு, 4.50 லட்சம் ரூபாய்க்கு மீன்பாசி குத்தகை ஏலம் எடுத்துள்ளார். கடந்த, 2.5 ஆண்டுகளாக
ஏரியில் மீன்களை பிடித்து விற்பனை செய்து வந்தார். நேற்று காலை ஏரியில், மீன்கள் ஆங்காங்கே செத்து மிதந்தன. நேற்று, மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சார் ஆய்வாளர் திருப்பதி உள்ளிட்டோர், ஏரியில் செத்து மிதந்த மீன்களை ஆய்வு செய்து, ஏரி நீரை மாதிரி ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
இது குறித்து, தர்மபுரி மீன் வளத்துறை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கூறுகையில், ''கோம்பேரி ஏரியில், புரட்டாசி மாதம் என்பதால் கடந்த, 2 வாரங்களாக ஏரியில் மீன் பிடிப்பதை குத்தகைதாரர் நிறுத்தி உள்ளார். இதனால் மீன்கள் அடர்த்தி அதிகமாகி உள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஏரியில் அதிகளவில் செடிகள், சீமை கருவேல மரங்கள் உள்ளிட்டவை அழுகி உள்ளதால், அதிலிருந்து அம்மோனியம் வெளிப்பட்டு, ஏரி நீரில் கலந்திருக்கலாம். எனவே, இதை கண்டறிய ஏரி நீரின் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இறந்த மீகள்களால் நீரில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலை தெளிக்க அறிவுறுத்தி உள்ளோம். நிலத்தடி நீர் பாதிக்க வாய்ப்பில்லை,'' என்றார்.