ADDED : ஏப் 24, 2025 01:24 AM
பாலக்கோடு:பாலக்கோட்டில், நவீன எரிவாயு தகன மேடையை, சீரமைக்கும் பணியை, பேரூராட்சி சேர்மன் நேற்று பூஜை செய்து தொடங்கி வைத்தார்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், 23,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், இறந்தவர்களின் சடலங்களை எரியூட்ட, நவீன எரிவாயு தகன மேடை கடந்த, 2020- - 2021ல், 75 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
இதில், தரமற்ற இயந்திரங்கள் பொருத்தபட்டதால், அவை பழுதாகி கடந்த, 3 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டி கிடந்தது.இது குறித்து, நம், 'காலைக்திர்' நாளிதழில் கடந்த மாதம், 28 அன்று செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, பேரூராட்சி பொதுநிதியில் இருந்து, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, எரிவாயு தகன மேடை சீரமைக்கும் பணிக்கு, நேற்று பாலக்கோடு பேரூராட்சி சேர்மன் முரளி பூஜை செய்து, தொடங்கி வைத்தார்.
இதில், பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் வகாப் ஜான், சரவணன், மோகன், ஜெயந்திமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.