/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'மக்களுக்கு செய்த திட்டங்களை பார்த்து தி.மு.க.,வுக்கு நல்ல மார்க் போடுங்கள்'
/
'மக்களுக்கு செய்த திட்டங்களை பார்த்து தி.மு.க.,வுக்கு நல்ல மார்க் போடுங்கள்'
'மக்களுக்கு செய்த திட்டங்களை பார்த்து தி.மு.க.,வுக்கு நல்ல மார்க் போடுங்கள்'
'மக்களுக்கு செய்த திட்டங்களை பார்த்து தி.மு.க.,வுக்கு நல்ல மார்க் போடுங்கள்'
ADDED : ஜன 28, 2025 07:27 AM
தர்மபுரி: ''தி.மு.க., அரசு, மக்களுக்கு செய்த திட்டங்களை பார்த்து, எங்களுக்கு நல்ல மதிப்பெண் போடுங்கள்,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, பாலஜங்கமனஹள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் பொது பணித்துறை சார்பில், 15.99 கோடி ரூபாய் மதிப்பில், 14 புதிய திட்டப்பணிகளுக்கு வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 1.83 கோடி ரூபாயில் முடிவுற்ற, 7 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 524 பயனாளிகளுக்கு, 5.24 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர் பேசியதாவது:
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட முதல்கட்ட பணியை யார் முடித்தால் என்ன, அதற்காக புள்ளையார் சுழி போட்டது, தி.மு.க., தான். மேலும், தி.மு.க., ஆட்சியில், தர்மபுரி மாவட்டம் தடங்கத்தில் சிப்காட் கொண்டு வரப்பட உள்ளது. இதை வேண்டாம் என போராட்டம் நடத்திய கட்சிகள், தற்போது வேண்டும் என கேட்கின்றனர்.
வீடுகளில் பணிபுரியும் பெண்களுக்கு கூலி கிடையாது. எனவே, அவர்களை கவுரப்படுத்தும் விதமாக அவர்களுக்கு, மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம், வீட்டிலுள்ள பெண்கள் ஆண்டுக்கு, 12,000 ரூபாய் பெறுகின்றனர். காலை உணவு திட்டம், மகளிர் உதவித்தொகை, மகளிர் இலவச பயணம் என எண்ணற்ற திட்டங்களை பெண்கள் மற்றும் மக்களுக்காக, தி.மு.க., அரசு செய்கிறது. அனைத்து திட்டங்களையும் வாங்கிக் கொண்டு, தேர்தல் நேரத்தில் ஓட்டு மட்டும் மற்ற கட்சிக்கு போட்டு விடுகிறீர்கள். எனவே, அரசு மக்களுக்கு செய்த திட்டங்களை பார்த்து, எங்களுக்கு நல்ல மதிப்பெண் போட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''தர்மபுரி சிப்காட்டிற்கு, 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு தொழில் செய்ய விரும்புவோர், இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். விரைவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட, 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது,'' என்றார். மாவட்ட கலெக்டர் சாந்தி, தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, ஆர்.டி.ஓ., காயத்ரி, மாவட்ட இடைநிலைக்கல்வி அலுவலர் மகாத்மா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

