/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'மா'வில் பூச்சி தாக்குதலை தடுக்க யோசனை
/
'மா'வில் பூச்சி தாக்குதலை தடுக்க யோசனை
ADDED : பிப் 19, 2026 07:04 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 2,600 ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தில் மா மரங்கள் பூக்க தொடங்கி மொட்டுவிட ஆரம்பிக்கும். மே மாதத்தில் அறுவடைக்கு வரும்.
தற்போது, மா மரங்களில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் தங்களது மாந்தோட்டங்களை முறையாக பராமரிப்பது அவசியமாகும். காற்று, மழை மற்றும் பூச்சி தாக்குதலால் பிஞ்சுகள் கொட்டாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பூக்கள் வெளிவரும் காலத்தில் தத்துப்பூச்சி, இலைப்பேன், இலை சுருட்டு கூடு புழு போன்ற பூச்சிகளின் தாக்குதல் மற்றும் சாம்பல் நோய், பறவை கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை முறையாக கட்டுப்படுத்த மெட்டாரைசியம், அனிசோபிலியே, லெக்கானி மற்றும் பேசியலஸ் சப்டிலிஸ் ஆகிய இயற்கை பூட்டி பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தலாம். இதில் ஒவ்வொன்றும், 5 மி.லி., அளவை எடுத்து, 1 லி., தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
மேலும், மா பிஞ்சுகள், பட்டாணி அளவில் தெரியும் போது, பயிர் வளர்ச்சி ஊக்கியை, 2 மி.லி., அளவில் எடுத்து, 10 லி., தண்ணீருடன் கலந்து தெளிப்பதன் மூலம் பிஞ்சுகள் உதிர்வதை தடுத்து மகசூலை அதிகரிக்கலாம். இந்த ஆலோசனைகளை பின்பற்றி விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

