/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வரத்து அதிகரிப்பு: சாம்பல் பூசணி விலை சரிவு
/
வரத்து அதிகரிப்பு: சாம்பல் பூசணி விலை சரிவு
ADDED : அக் 11, 2024 01:19 AM
வரத்து அதிகரிப்பு: சாம்பல் பூசணி விலை சரிவு
தர்மபுரி, அக். 11-
தர்மபுரி பகுதியில் வரத்து அதிகரிப்பால், சாம்பல் பூசணி விலை குறைந்து விற்பனையானது.
தமிழகத்தில், ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தொழில் செய்யும் இடங்களில் பூஜைக்கு பின், திருஷ்டி கழிக்க வெள்ளை பூசணியை மக்கள் பயன்படுத்துவர். இதற்காக தர்மபுரி பகுதியில், விற்பனைக்காக சாம்பல் பூசணி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தர்மபுரியை சேர்ந்த வியாபாரி முருகன் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பஞ்சப்பள்ளி, பாலக்கோடு, சோமஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சாம்பல் பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. ஆயுத பூஜைக்காக, இதை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து, சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர். கடந்தாண்டு ஒரு கிலோ சாம்பல் பூசணி, 50 முதல், 70 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ சாம்பல் பூசணி, 30 முதல், 50 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பூக்கள் விற்பனை ஜோர்
ஆயுத பூஜையையொட்டி, தர்மபுரி பூ மார்க்கொட்டில் பூக்கள் விற்பனை நேற்று ஜோராக நடந்தது. பூ மார்க்கெட்டுக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் பூக்கள் வாங்க வந்திருந்தனர். மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை, 220 ரூபாய், சம்பங்கி, 300, சந்தனமல்லி, 550, ஜாதிமல்லி, 300, காக்கடா, 320, குண்டுமல்லி, 500, சன்னமல்லி ஒரு கிலோ, 300 ரூபாய் என விற்பனையானது.