/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தக்காளி வரத்து அதிகரிப்பு: விலையில் தொடர் சரிவு
/
தக்காளி வரத்து அதிகரிப்பு: விலையில் தொடர் சரிவு
ADDED : நவ 11, 2024 07:21 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஹள்ளி, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஹள்ளி, எலங்காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு தினமும், 100 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது. இங்கிருந்து தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், மழைபொழிவு குறைந்ததால், தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி, 18 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதில், 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 270 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ, 50 முதல், 80 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது கொள்முதல் விலை, 18 ரூபாய் ஆகவும், விற்பனை விலை, 25 ரூபாய்க்கும் குறைவாகவும் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், தக்காளி நல்ல மகசூல் கிடைத்த நிலையில், விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.