மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கட்டாயமாக்க அறிவுறுத்தல்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கட்டாயமாக்க அறிவுறுத்தல்
ADDED : நவ 20, 2026 01:36 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த ஆய்வு கூட்டம்,
கமிஷனர் அமுதா தலைமையில் நடந்தது. இதில், வருங்காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க, தர்மபுரி நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையோடு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். நகராட்சி பகுதி அனைத்து குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டடங்கள், கல்வி, வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டாயமாக்க வேண்டும். ஏற்கனவே, கட்டடங்களில் அமைத்துள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை துார்வாரி, மழைநீர் எளிதில் பூமிக்குள் செல்ல தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைநீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், எதிர்கால குடிநீர் தேவையையும் ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். மேலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி, தண்ணீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.இதில், நகராட்சி பொறியாளர், நகரமைப்பு ஆய்வாளர்கள், பதிவு பெற்ற பொறியாளர்கள், தர்மபுரி நகர குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
