/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொழிலாளர் பற்றாக்குறையால் மரவள்ளி அறுவடை பாதிப்பு
/
தொழிலாளர் பற்றாக்குறையால் மரவள்ளி அறுவடை பாதிப்பு
ADDED : டிச 08, 2024 01:34 AM
தொழிலாளர் பற்றாக்குறையால்
மரவள்ளி அறுவடை பாதிப்பு
அரூர், டிச. 8-
தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், 30,000 ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2 மாதமாக மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணி நடக்கிறது. இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், கோட்டப்பட்டி, கீழானுார், பொய்யப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, ஒடசல்பட்டி, பேதாதம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், தாழ்வான பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், மரவள்ளிக்கிழங்கு அழுகி வருகிறது. இதையடுத்து, ஒரே நேரத்தில் மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், போதியளவில் கூலியாட்கள் இல்லாததால், மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர். ஏற்கனவே, மரவள்ளிக்கிழங்கின் விலை, கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், ஆட்கள் பற்றாக்குறையால் மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.