/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொடர் மழை, நீர் வரத்தால் சேதமடைந்த ஏரி கரைகள்
/
தொடர் மழை, நீர் வரத்தால் சேதமடைந்த ஏரி கரைகள்
ADDED : அக் 27, 2024 01:23 AM
தர்மபுரி, அக். 27-
தர்மபுரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழையால் ஏரிகள், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தர்மபுரி அடுத்துள்ள வத்தல்மலையில் பெய்த கன மழையால், மலை அடிவாரத்தை ஒட்டிய மிட்டாரெட்டிஹள்ளி, நார்த்தம்பட்டி, மாதேமங்கலம், அதியமான்கோட்டை உள்ளிட்ட பஞ்.,ல் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, சின்ன ஏரி, வேடகவுண்டன் குட்டை உள்ளிட்டவை நிரம்பி, உபரிநீர் கால்வாய்கள் வழியாக மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதில், ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் ஏரிக்கரைகள் உள்ளிட்டவை துார்வாருதல், கரை பலப்படுத்தும் பணிகள் பெயரளவிற்கு மட்டும் செய்தனர். இதனால், கால்வாய்களில் தண்ணீர் செல்லாமல், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளது. மாதேமங்கலம் பஞ்., ல் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டிலுள்ள சோழவராயன் ஏரி, 270 ஏக்கர் பரப்பளவில், 32 கன மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. இதன் மூலம், 405 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், ஏரி கரைகளில் ஆங்காங்கே, மண் அரிப்பு ஏற்பட்டு, கரைகள் சேதமடைந்தன. இதனால், ஏரியில் தண்ணீர் முழுவதும் நிரம்பினால், உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையறிந்த தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், நேற்று சோழவராயன் ஏரிக்கு சென்று, சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க, பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இதில், பொதுப்பணி துறை உதவி பொறியாளர் மோகனபிரியா, உதவி செயற்பொறியாளர் கணேசன், ஏரி ஆயக்கட்டு தலைவர் கந்தசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.