ADDED : பிப் 23, 2024 04:31 AM
தர்மபுரி: தர்மபுரியில், பல்வேறு கால்நடைகள் வளர்ப்பு குறித்து நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
தர்மபுரி அடுத்த, குண்டல்பட்டி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கால்நடைகள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இப்பயிற்சி வழங்கப்பட்டது. இதில், கறவை மாடு, ஆடு மற்றும் கோழி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் தர்மபுரி மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹூமுகமதுநசீர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, அரசு திட்டங்கள், மகளிர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. மைய தலைவர் கண்ணதாசன், கால்நடைகளுக்கான கொட்டகை, தீவனம், இனப்பெருக்கம் மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கினார்.
மேலும், சுகாதாரமான பால் உற்பத்தி, பசுந்தீவனம், அசோலா உற்பத்தி மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரிப்பு குறித்து, விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தீவனம், இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு, பயற்சி கையேடு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.