/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நிர்வாகிகள் அதிருப்தியால் அமைச்சர் நிகழ்ச்சிகள் ரத்து தர்மபுரி தி.மு.க.,வில் கோஷ்டி மோதல் உச்சகட்டம்
/
நிர்வாகிகள் அதிருப்தியால் அமைச்சர் நிகழ்ச்சிகள் ரத்து தர்மபுரி தி.மு.க.,வில் கோஷ்டி மோதல் உச்சகட்டம்
நிர்வாகிகள் அதிருப்தியால் அமைச்சர் நிகழ்ச்சிகள் ரத்து தர்மபுரி தி.மு.க.,வில் கோஷ்டி மோதல் உச்சகட்டம்
நிர்வாகிகள் அதிருப்தியால் அமைச்சர் நிகழ்ச்சிகள் ரத்து தர்மபுரி தி.மு.க.,வில் கோஷ்டி மோதல் உச்சகட்டம்
ADDED : ஏப் 12, 2025 01:17 AM
தர்மபுரி, ஏப்.12
தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிர்வாகிகளின் கடும் அதிருப்தியால், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தமிழக வேளாண் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில், பங்கேற்பதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அமைச்சரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதற்கு, தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசல் மற்றும் அமைச்சர் வருகையின் போது, அவருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என உளவுத்துறை அளித்த தகவலே காரணம் என, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தர்மபுரி மாவட்ட தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த, 2010ல் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு அமைச்சர் வேலு, 2014 லோக்சபா தேர்தலுக்கு செல்வகணபதி, 2019 லோக்சபா மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு மீண்டும், அமைச்சர் வேலு, 2021
சட்டசபை தேர்தலின் போது அமைச்சர் பன்னீர்செல்வம் என, தர்மபுரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இதனால், முல்லைவேந்தனுக்கு பின், கடந்த, 15 ஆண்டுகளாக தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வில் உள்ளூரைச் சேர்ந்த யாரும் செல்வாக்கு மிக்க தலைவர்களாக உருவாகவில்லை.
கோஷ்டி பூசல் அதிகரிப்பு
வெளி மாவட்டத்தை சேர்ந்த பொறுப்பாளர்களால் கட்சி வளர்ச்சி பாதிக்கப்பட்டதுடன், கோஷ்டி பூசல் தான் அதிகரித்துள்ளது. தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்ரமணியை கடந்த, பிப்., 23ல் தி.மு.க., தலைமை நீக்கி, அவருக்கு பதிலாக தர்மசெல்வனை நியமனம் செய்தது. உதயநிதி மூலம் தர்மசெல்வன் மாவட்ட பொறுப்பாளராக பதவி பெற்றது, அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு பிடிக்கவில்லை. இதனால், தர்மசெல்வன் பதவியில் இருந்த, 28 நாளும், தர்மபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் வரவில்லை.
தர்மபுரியில் நடந்த
கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில், 'கலெக்டர், எஸ்.பி., எல்லாரும் நான் சொல்றது மட்டும்தான் கேட்கனும், இல்லேன்னா அவங்க இங்கே இருக்க மாட்டாங்க, அமைச்சர் பன்னீர்செல்வம் நான் சொல்வதை தான் கேட்கணும்' என தர்மசெல்வன் பேசிய ஆடியோ வைரலானது.
இதையடுத்து, 28 நாட்களில் தர்மசெல்வனை பொறுப்பாளர் பதவியில் இருந்து தி.மு.க., தலைமை நீக்கியது. தர்மபுரி எம்.பி., மணியை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்து அறிவித்தது.
மேற்கு மாவட்டத்துக்கு பதவி
கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, தர்மபுரி, பென்னாகரம் ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், பாலக்கோடு தொகுதியை சேர்ந்த தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., துணைச் செயலாளராக இருந்த மணி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த, தி.மு.க.,
நிர்வாகிகள் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில், ' கோ பேக், எம்.ஆர்.கே.,' என, பதிவிட்டனர். இதையடுத்து, அமைச்சர் பன்னீர்செல்வம், அவரது உதவியாளர் தேவ் ஆனந்த் ஆகியோர் அழுத்தத்தால் எஸ்.பி., அலுவலகத்திற்கு தி.மு.க., நிர்வாகிகளை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தியதால், கொந்தளித்தனர்.
கருப்பு கொடி காட்ட முடிவு
கிழக்கு மாவட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர் மணி, தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், தர்மசெல்வன் ஆகியோர் தனித்தனியாக கோஷ்டி அரசியல் செய்து வருகின்றனர். இதற்கிடையே அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. அமைச்சர் வருகையின் போது, தி.மு.க., நிர்வாகிகள் அவருக்கு கருப்பு கொடி காட்ட இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, அமைச்சரின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேற்கு மாவட்டத்திலும் கோஷ்டி பூசல்
தர்மபுரி மேற்கு மாவட்டத்திலும், மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு, எம்.பி., மணி என, நான்கு கோஷ்டிகள் உள்ளன. மாவட்ட செயலாளர் பழனியப்பன், அ.தி.மு.க.,வில் இருந்து தன்னுடன் வந்தவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கி வருகிறார். பி.ஏ.,க்கள் மூலம் கட்சி நடத்துகிறார். பேனர் மற்றும் போஸ்டர்களில் அவரது மகனை முன்னிலைப்படுத்தி போட்டோ போடுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என கட்சியினர் புகார் பட்டியல் வாசிக்கின்றனர். ஒன்றிய, நகர செயலாளர்கள் பழனியப்பனுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், கட்சியில் நிலவும் பிரச்னைகளை சரி செய்யாவிட்டால், 2021 சட்டசபை தேர்தல் போல், மாவட்டத்தில் உள்ள, ஐந்து தொகுதிகளிலும், தி.மு.க.,வின் வெற்றி கேள்விக்குறிதான்.

