அரூரில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மொபைல் போன் திருட்டால் அதிர்ச்சி
அரூரில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மொபைல் போன் திருட்டால் அதிர்ச்சி
ADDED : அக் 19, 2026 02:04 AM
அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்டில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தங்களிடமிருந்து மொபைல் போன் திருடப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும், அரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வெளியூர் பயணிகள் என, ஆயிரக்கணக்கானேர் வந்து செல்கின்றனர். அரூர் வழியாக, சேலம், கோவை, வேலுார், திருவண்ணாமலை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. அரூர் பஸ் ஸ்டாண்டில், ஏற்கனவே, மொபைல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், ஆயுத பூஜை கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதிகளவில் மொபைல்போன் திருடப்பட்டதால், பயணிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
அரூர் பஸ் ஸ்டாண்டில், கூலித்தொழிலாளர்கள், வெளியூர் பயணிகள், கல்லுாரி மாணவ, மாணவியரிடம் மொபைல் போன் திருடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆயுத பூஜை கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பொதுமக்கள் பஸ்சில் ஏறும் போதும், இறங்கும் போதும் அவர்களை திசை திருப்பி, பாக்கெட்டில் உள்ள மொபைல் போன்களை திருடிச் சென்றுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 30க்கும் மேற்பட்டோரிடம் மொபைல்போன் திருட்டு நடந்துள்ளது. அதே போல், வெளியூர் செல்லும் பஸ்களில் வரும் பயணிகள், அரூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி கழிப்பறைக்கு சென்று வரும்போது, அவர்களிடமும் மொபைல்போன்கள் திருடப்படுகிறது. மொபைல்போனை பறிகொடுப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே, போலீசில் புகார் அளிக்கும் நிலையில், பெரும்பாலானோர் புகார் கொடுப்பதில்லை.
பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் இருந்தபோதும், அது பூட்டியே கிடக்கிறது. போலீசார் பெரும்பாலும் பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. இதனால், மொபைல் போன் திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே, அரூர் பஸ் ஸ்டாண்டில், மொபைல்போன் திருட்டை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
