/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொசு ஒழிப்பு பணியாளர்கள் கோரிக்கை
/
கொசு ஒழிப்பு பணியாளர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2025 01:27 AM
தர்மபுரி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில், பணிபுரியும் கொசு ஒழிப்பு கள பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி, தமிழ்நாடு கொசு ஒழிப்பு பணியாளர் சங்கத்தினர் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டத்திலுள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொசு ஒழிப்பு பணியில் கடந்த, 18 ஆண்டுகளாக மிக குறைந்த தினக்கூலி, 370 ரூபாய்-க்கு பணியாற்றுகிறோம். தர்மபுரி மாவட்டத்திலுள்ள, அனைத்து கிராமங்களுக்கும் வீடு வரை சென்று, பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு, கொசு ஒழிப்பு, கொசு புகை மருந்து அடித்து வருகிறோம். 30 கி.மீ., வரை உள்ள கிராமங்களுக்கு சென்று வருவதால், பஸ் கட்டணம், 50 ரூபாய் வரை செலவாகிறது. எங்கள் ஊதியத்தில் மீதம், 320 ரூபாய் வைத்துக்கொண்டு, குடும்பம் நடத்த மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு பற்றாக்குறையாக உள்ளது. எனவே, ஒரு நாள் தின கூலியாக குறைந்தபட்சம், 600 ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், தர்மபுரி, பென்னாகரம் பகுதியில், 2 மாத ஊதியம், ஏரியூர் பகுதியில், 4 மாத ஊதியம் நிலுவையில் உள்ளது. அதை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.