ADDED : பிப் 20, 2024 10:21 AM
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகளுடன் பொதுமக்கள் வழங்கிய, 407 மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, 93,000 ரூபாய் மதிப்புள்ள வாகனத்தை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாலியல் சீண்டலுக்கு எதிரானவிழிப்புணர்வு கூட்டம்
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்ட விழிப்புணர்வு குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அனைத்து துறை அலுவலர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், தனத்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜ.,வில் இணையும் விழாஓசூரிலுள்ள மேற்கு மாவட்ட, பா.ஜ., அலுவலகத்தில், மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்தது. வக்கீல்கள் நவீன்குமார், அன்பழகன் ஆகியோர், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலையில், பா.ஜ., கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். அதேபோல், தளி தெற்கு ஒன்றியம், மாடக்கல் பஞ்., உட்பட்ட, 50 இளைஞர்கள், பா.ஜ., கட்சியில் இணைந்தனர். மாவட்ட பொருளாளர் சீனிவாசன், செயலாளர் பிரவீன்குமார், துணைத்தலைவர் முருகன், மகளிர் அணி மஞ்சுளா, சுதா உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழக வெற்றி கழகநிர்வாகிகள் கூட்டம்
சூளகிரியில், நடிகர் விஜயின், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் வடிவேல், செயலாளர் சுரேஷ் பேசினர். கூட்டத்தில், வரும் தேர்தலில் அனைத்து இளைஞர்கள் மற்றும் விஜயின் ரசிகர்கள் ஒன்றிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு, அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் கட்சி, கால் பதிக்க வேண்டும் என பேசினர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் லோகேஷ், சூளகிரி ஒன்றிய தலைவர் சிவராஜ், செயலாளர் விகாஸ், ஒன்றிய பொறுப்பாளர் சபரி உட்பட பலர் பங்கேற்றனர்.
மரத்திலிருந்து விழுந்தவர் இறப்புஊத்தங்கரையை அடுத்த, சாமல்பட்டி அருகே உள்ள பரசனுாரை சேர்ந்தவர் குமரேசன், 52; இவர் தன்னுடைய நிலத்திலுள்ள புளிய மரத்தில் ஏறி புளி பறிக்கும்போது, தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலையில் பைக் கவிழ்ந்துதனியார் ஊழியர் சாவு
கர்நாடக மாநிலம், பெங்களூரு, மினியா ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் மணி, 55; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த, 18 காலை ஹீரோ ஹோண்டா பைக்கில் சென்றுள்ளார். தொகரப்பள்ளி வனப்பகுதி அருகில், மத்துார் - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பைக், சாலையில் கவிழ்ந்ததில் படுகாயமடைந்து அவர் உயிரிழந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலை விபத்தில் தொழிலாளி பலிகிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த கண்ணண்டஅள்ளி ஜெ.ஆர்., நகரை சேர்ந்தவர் தங்கவேல், 50, செருப்பு தைக்கும் தொழிலாளி. கடந்த, 18 காலை, வீட்டருகே டி.வி.எஸ்., மொபட்டில், ஜெ.ஆர்.நகர் மத்துார் - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது அந்த வழியாக சென்ற கார் மோதி இறந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தென்னிந்திய பழங்குடி
கூட்டமைப்பு செயற்குழு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஆசிரியர் நகர் பகுதியில், தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. நிறுவன தலைவர் பழங்குடி பாலு தலைமை வகித்தார். தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இருளர், நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஜவ்வாது மலை பழங்குடியினத்தை சேர்ந்த, முதல் பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழங்குடியின மக்களுக்கு தொகுப்பு வீடுகள், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் பூர்த்தி செய்ய வேண்டும். ஜாதி சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும். நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். விலையில்லா கறவை பசுமாடு வழங்க வேண்டும். பழங்குடி மக்கள் வசிக்கும் இடங்களில் மயான வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி, பெருமாள், வேடியப்பன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட கட்டுரை போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பண்டைய தமிழ் சமூகம் என்ற தலைப்பில் நடந்த கட்டுரை போட்டியில் முதல், 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால், கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த, 2023 ஆக., 8ல் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பண்டைய தமிழ் சமூகம் என்னும் தலைப்பில், மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல், 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, சி.இ.ஓ., மகேஸ்வரி சான்றிதழ்களுடன் பரிசு தொகையை வழங்கினார். அதன்படி, சூலாமலை அரசு உயர்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி இந்துஸ்ரீக்கு முதல் பரிசாக, 5,000 ரூபாய், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி தனுஸ்ரீக்கு, 2ம் பரிசாக, 2,000 ரூபாய், ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு மாணவி ஸ்வேதாவுக்கு, 3ம் பரிசாக, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சூலாமலை தலைமை ஆசிரியர் பத்மப்பிரியா, தொல்லியல் அலுவலர் பரந்தாமன், மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.
ஊத்தங்கரையில் வழக்கறிஞர்கள்
நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு
இலங்கை போரில், தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், 2009- பிப்., 19-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் பிப்., 19-ம் தேதியை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கறுப்பு தினமாக கடைபிடிக்கின்றனர். இதேபோல், ஊத்தங்கரை நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் கறுப்பு தினத்தை கடைபிடித்து, நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.
கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஓசூர் அருகே பாகலுாரில், 400 ஆண்டுகள் பழமையான கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில், 7 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 17 ல் துவங்கியது. அன்று காலை, 8:15 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா லட்சுமி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். விழாவில் நேற்று முன்தினம் சிறப்பு ஹோமங்கள், சுவாமி ஊர்வலம் நடந்தது.
நேற்று காலை, 9:30 மணிக்கு, கோட்டை மாரியம்மன் கோபுரம், கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா உட்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, பாகலுார் பஞ்., தலைவர் ஜெயராமன், பாபு, மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
நில அளவீடு அதிகாரிகளுடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
பர்கூர் அருகே கோவில் நிலங்களை, தனியார் சிலர் அபகரித்துள்ளதாக கூறி, அளவீடுக்கு வந்த அதிகாரிகளிடம், கிராம மக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட் டம், பர்கூர் அடுத்த செந்தாரப்பள்ளியில், 500 ஆண்டு பழமையான கண்ணன் பெருமாள் மற்றும் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 12 ஏக்கர் நிலம் இருந்த நிலையில் கடந்த, 1959ல் கோவில் நிலங்களை சிலர் அபகரித்துள்ளதாகவும், கோவில் நிலங்களை தனிநபர் பெயர்களில் பட்டாவாக மாற்றியுள்ளதாகவும் கூறி, அப்பகுதி மக்கள், ஹிந்து சமய அறநிலைத்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று, அந்த நிலங்களை அளவீடு செய்ய, நீதிமன்ற ஆணையுடன் அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கு திரண்ட மக்கள், நில அபகரிப்பில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக கூறி, நில அளவீடு செய்யக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பர்கூர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், நிலத்தை அளக்காமலேயே அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
லாரி டிரைவர் மர்ம சாவு
அரூர் அடுத்த வீரப்பநாய்க்கன்பட்டி, பாளையத்தை சேர்ந்தவர் ராமஜெயம், 46, லாரி டிரைவர்; இவர் மனைவி செண்பகவள்ளி; இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூதநத்தம் கிராமத்திலுள்ள தன் உறவினர் நீலமேகம் என்பவரின் வீட்டுக்கு ராமஜெயம் சென்றார். பின் குண்டல்மடுவிலுள்ள நீலமேகத்தின் விவசாய தோட்டத்திற்கு சென்று இரவு தங்கினார். நேற்று காலை நீண்ட நேரம் ராமஜெயம் வராததால், தோட்டத்திற்கு சென்று நீலமேகம் பார்த்தார். அப்போது, ராமஜெயம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். புகார் படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மண் கடத்தியவர் கைதுபாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டவர்த்தி பகுதியில், நாரணாபுரம் வி.ஏ.ஓ., தீபா நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தார். அதில் அனுமதியின்றி ஒரு யூனிட் நொரம்பு மண் எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து டிராக்டர் டிரைவரான கள்ளியூரை சேர்ந்த செந்தில், 43, என்பவர் மீது ஏ.பள்ளிப்பட்டி போலீசில் வி.ஏ.ஓ., தீபா புகார் செய்தார். அதன் படி போலீசார் செந்திலை கைது செய்து, டிராக்டர், டிரைலரை பறிமுதல் செய்தனர்.
விபத்தில் தொழிலாளி பலிதர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா கொல்லம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை, 58; கூலித்தொழிலாளி; இவர் நேற்று மதியம், 2:30 மணிக்கு, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் இருமத்துார் - தர்மபுரி சாலையில், முரளி டிபார்ட்மென்ட் அருகில் சென்றார். அப்போது, பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியதில் படுகாயமடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புகார்படி, கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓட்டுச்சாவடிகளில் ஆய்வுஅரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சித்தேரி மலை பஞ்.,ல், சித்தேரி, சூரியக்கடை, பேரேரிப்புதுார், எஸ். அம்மாபாளையம், சேலுார் மற்றும் வேலனுார், சிட்லிங் உள்ளிட்ட அரசு பள்ளி ஓட்டுச்சாவடிகளில் அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சூரியகடையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம், மற்றும் சித்தேரி பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வு செய்தார்.
பைக் விபத்தில் இருவர் பலி
எர்ரசீகலஹள்ளி பஸ் ஸ்டாப் அருகே, 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில், இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த மலையப்ப நகரை சேர்ந்தவர் ரமேஷ், 35; இவர், நேற்று மாலை பாலக்கோட்டிலிருந்து காவேரிப்பட்டணம் நோக்கி, தன் ஹீரோ பிளஸர் மொபட்டில் சென்றார். அதேபோன்று காவேரிப்பட்டணம் அடுத்த கத்தேரியை சேர்ந்த கணேஷ்குமார், 35, என்பவர் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில், காவேரிப்பட்டணத்தில் இருந்து பாலக்கோடு நோக்கி சென்றார். மாலை, 6:30 மணியளவில், எர்ரசீகலஹள்ளி பஸ் ஸ்டாப் அருகே, 2 டூவீலர்களும் நேருக்கு நேர் மோதியதில், இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காரிமங்கலம் போலீசார் சம்பவ இடம் சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு, விசாரிக்கின்றனர்.
கடத்துாரில் பிளாஸ்டிக் ஒழிப்பு
8 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
கடத்துார் பேரூராட்சி பகுதிகளில், அரசு தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெட்டிக்கடை முதல் மளிகை கடை உள்ளிட்ட அனைத்து கடை
களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது குறித்து, நேற்று நம், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர் உத்தரவின் படி, பேரூராட்சி பணியாளர் செந்தில் உள்ளிட்டோர் முதற்கட்டமாக, 15க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் தடைசெய்யப்பட்ட, 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், 8 கடைகளுக்கு மொத்தம், 3,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
விலங்கு வேட்டையாட முயற்சி
இருவர் கைது; துப்பாக்கி பறிமுதல்
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி போலீஸ் எஸ்.ஐ., குணசேகரன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் இரவு பொம்மிடி -- ராமமூர்த்தி நகர் ரோடு செல்லும் சோதனைச்சாவடியில், வாகன தணிக்கை நடத்தினர். அப்போது வேப்பாடியில் இருந்து பொம்மிடி நோக்கி வந்த மாருதி சுசுகி ஈகோ காரை நிறுத்த முயன்றனர். அப்போது காரில் இருந்த, 4 பேர் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பினர். போலீசார் காரை திறந்து பார்த்தபோது, அதில் நாட்டு துப்பாக்கி, நெத்தி பேட்டரி லைட், சார்ஜர் ரப்பர் மூடியுடன் உருண்டை வடிவத்தில் சிறிய குண்டுகள் ஆகிய பொருட்கள் இருந்ததை கைப்பற்றினர்.
இதையடுத்து போலீ சார், பொம்மிடி ரயில்வே மேம்பால பகுதியில் சேலம் கொண்டப்ப நாய்க்கன்பட்டி ஜீவா நகரை சேர்ந்த கோபி, 31, கோவிந்தசாமி, 33, ஆகிய இருவரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள், இரவில் வனவிலங்குகள் வேட்டையாட துப்பாக்கியுடன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, தப்பியோடிய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் முதலாவதாக அரசு பள்ளியில்
'குறுங்காடுகள்' திட்டம் துவக்கி வைப்பு
தமிழகத்தில் முதன் முறையாக, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 'குறுங்காடுகள்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், காடுகளின் பரப்பளவை அடுத்த, 10 ஆண்டுகளில், 33 சதவீதமாக உயர்த்தும் வகையில், 260 கோடி உள்நாட்டு மரக்கன்றுகளை நட, தமிழக அரசால் திட்டமிடப்பட்டது. அதற்காக, 'குறுங்காடுகள்' திட்டம் கடந்த, 2022 செப்.,ல் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள காடுகளின் பரப்பளவு, 31,194 சதுர கிலோ மீட்டராகும். இதை, 42,919 சதுர கிலோ மீட்டராக மாற்ற, அரசு முயற்சி எடுத்துள்ளது.
இத்திட்டத்தின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று, தமிழகத்திலேயே முதல் முறையாக, 'குறுங்காடுகள்' திட்டம் செயல்படுத்தப் பட்டது. தேசிய பசுமைப்படை சார்பில், பள்ளி வளாகத்தில், 50 சென்ட் நிலத்தில், குறுங்காடு ஒன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் வேந்தன், பெற்றோர் சங்க தலைவர் பாபு, பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், தொழிலதிபர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிளஸ் 1 வகுப்பு செய்முறை தேர்வு துவக்கம்
தர்மபுரி மாவட்டத்திலுள்ள, அரசு பள்ளி, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என, 180 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு, பிளஸ் 1 வகுப்பில், 9,380 மாணவர்கள், 9,953 மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கான முழு ஆண்டு பொதுத்தேர்வு வரும் மார்ச், 4ல் தொடங்க உள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு படி, தர்மபுரி உட்பட, தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 180 மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும், 15,000 மாணவ, மாணவியர் நேற்று நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்றனர். செய்முறை தேர்வு நடந்த பள்ளிகளில், தர்மபுரி சி.இ.ஓ., ஜோதிசந்திரா ஆய்வு செய்தார். பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வரும், 24 வரை நடக்கவுள்ளது.

