ADDED : அக் 23, 2026 05:44 AM
அரூர்:'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, அரூர் பஸ் ஸ்டாண்டில், பூட்டிக்கிடந்த புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும், அரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வெளியூர் பயணிகள் என, ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அரூர் வழியாக, சேலம், கோவை, வேலுார், திருவண்ணாமலை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
அரூர் பஸ் ஸ்டாண்டில், கூலித்தொழிலாளர்கள், வெளியூர் பயணிகள், கல்லுாரி மாணவ, மாணவியரிடம் மொபைல் போன் திருடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆயுத பூஜை கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பொதுமக்கள் பஸ்சில் ஏறும் போதும், இறங்கும் போதும் அவர்களை திசை திருப்பி, பாக்கெட்டில் உள்ள மொபைல்போன்களை திருடிச் சென்றுள்ளனர். கடந்த, 17, 18 ஆகிய இரு நாட்களில் மட்டும், 30க்கும் மேற்பட்டோரிடம் மொபைல்போன் திருட்டு நடந்துள்ளது. அதேபோல், வெளியூர் செல்லும் பஸ்களில் வரும் பயணிகள், அரூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி கழிப்பறைக்கு சென்று வரும்போது, அவர்களிடமும் மொபைல்போன்கள் திருடப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் இருந்தபோதும், அது பூட்டியே கிடக்கிறது. போலீசார் பெரும்பாலும் பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. இதனால், மொபைல் போன் திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருவதாக பொதுமக்கள், புகார் தெரிவித்து வந்தனர். இது குறித்து செய்தி, 'காலைக்கதிர்' நாளிதழில், கடந்த, 19ம் தேதி வெளியானது. இதையடுத்து, அரூர் பஸ் ஸ்டாண்டில் பூட்டிக்கிடந்த புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு, அங்கு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
