/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நஷ்டம்; அரூர் விவசாயிகள் வேதனை
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நஷ்டம்; அரூர் விவசாயிகள் வேதனை
நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நஷ்டம்; அரூர் விவசாயிகள் வேதனை
நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நஷ்டம்; அரூர் விவசாயிகள் வேதனை
ADDED : பிப் 19, 2025 06:53 AM
அரூர்: அரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், நஷ்டப்பட்டு வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை நன்கு பெய்ததால், அரூர் சுற்று வட்டார பகுதியில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். தற்போது, நெல் அறுவடை பணி நடக்கிறது. அரூரில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், இடைத்தரகர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட குறைவான விலைக்கு நெல்லை வாங்குவதால், நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: அரூரில், நேரடி கொள்முதல் நிலையம் துவங்கினால், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம், 14 டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில், 300க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளதால், தினமும் குறைந்தபட்சம், 70 டன் நெல்லுக்கு மேல் கொள்முதல் செய்யலாம். மத்திய அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து, மோட்டா வகை நெல் குவிண்டால், 2,265 ரூபாய், சன்னரக நெல், குவிண்டால், 2,310 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு குவிண்டால் சன்னரக நெல்லை, 1,800 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து, இடைத்தரகர்கள் வாங்குகின்றனர்.
இதனால், குவிண்டாலுக்கு, 500 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. நெல் நடவு, களை எடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்து என, ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய, 40,000 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், விவசாயிகளிடமிருந்து, இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்குவதால் கடும் நஷ்டம் ஏற்படுகிறது.
அரூரில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த, 2021 ல் அரூரில் நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அரூரில், அரசின் நேரடி கொள்முதல் நிலையம் துவங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.