/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கம் நிறுத்தம்
/
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கம் நிறுத்தம்
ADDED : மார் 14, 2024 01:37 AM
பென்னாகரம், ஒகேனக்கல்லில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பரிசல் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள், காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்வர்.
கடந்த, 10 நாட்களுக்கு முன், ஐந்தருவிக்கு செல்லும் வழியில் தொம்மச்சிக்கல் பகுதியில் படித்துறையை மேம்படுத்த, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், ஒகேனக்கல் மேம்பாட்டு நிதியிலிருந்து, 36.83 லட்சம் ரூபாய் ஒதுக்கி, பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும், தொடர்ந்து பரிசல்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், எந்தவித அறிவிப்பும் இன்றி பரிசல் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து பென்னாகரம் பி.டி.ஓ., கிருஷ்ணனிடம் கேட்டபோது, ''ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கப்படாதது தற்போது தான் தெரியவந்தது. பரிசல் இயக்கக்கூடாது என, நான் எதுவும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக, பரிசல் ஓட்டிகளிடம் விளக்கம் கேட்டுள்ளேன்,'' என்றார்.
பரிசல் ஓட்டிகள் சங்க நிர்வாகி வெங்கடேஷ் கூறுகையில், ''ஐந்தருவிக்கு செல்லும் தொம்பச்சிக்கல் பகுதியில், மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. அப்போது, கற்களை உடைக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால், பரிசல் இயக்கவில்லை,'' என்றார்.

