/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
/
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 12, 2025 01:48 AM
பென்னாகரம், பென்னாகரம் அருகே, சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சாய்பாபா நகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இதுவரையில் சாலை, சாக்கடை உள்ளிட்ட வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. இதனால், அப்பகுதி மண் சாலையாகவே இருக்கிறது.
இங்கு செயல்பட்டு வரும், தனியாருக்கு சொந்தமான ஐஸ் கம்பெனியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியூர் - பென்னாகரம் மெயின் ரோட்டில் வந்து, குட்டை போல் தேங்கி நிற்கிறது. பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அச்சாலையை கடக்கும்போது, அந்த கழிவுநீர் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது தெறிக்கிறது. காலை, மாலை நேரங்களில் சென்று வரும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் இவ்வழியே சென்று வரும் போது, மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, சாய்பாபா நகரில் சாக்கடை கால்வாய் அமைத்து, சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.