/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அடிப்படை வசதி வேண்டி மக்கள் சாலைமறியல்
/
அடிப்படை வசதி வேண்டி மக்கள் சாலைமறியல்
ADDED : அக் 16, 2025 01:01 AM
அரூர்: அரூர் அம்பேத்கர் நகரில், சாக்கடை கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் மீனவர் பேட்டையில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக துார்வாராததல் அதில் கழிவுநீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் கால்வாய் சேதமாகி உள்ளது. இதனால் கழிவுநீர் அங்குள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது.
தேங்கிய கழிவு நீரால் அப்பகுதியில் துார்நாற்றம் வீசுவதுடன், அதில் உற்பத்தியாகும் கொசுக்களால் தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்திடம் இது குறித்து பொதுமக்கள் பலமுறை கூறியும் கழிவுநீர் கால்வாய் துார்வாரப்படவில்லை. அதே போல், போதியளவில் குடிநீர், சிமென்ட் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை, 7:45 மணிக்கு, அரூர் -திருவண்ணாமலை சாலையில், அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தம் அருகில், சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரூர் நகராட்சி கமிஷனர் ஹேமலதா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர் மீனவர்பேட்டை பகுதிக்கு சாக்கடை கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 8:30 மணிக்கு கலைந்து சென்றனர். மறியலால், 45 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.