/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'போலீசாரின் ரோந்து பணியால் திருட்டு சம்பவங்கள் தடுப்பு'
/
'போலீசாரின் ரோந்து பணியால் திருட்டு சம்பவங்கள் தடுப்பு'
'போலீசாரின் ரோந்து பணியால் திருட்டு சம்பவங்கள் தடுப்பு'
'போலீசாரின் ரோந்து பணியால் திருட்டு சம்பவங்கள் தடுப்பு'
ADDED : ஆக 22, 2025 01:34 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், போலீசார் பயன்படுத்தும் வாகனங்களின் மாதாந்திர ஆய்வு மற்றும் செயல்பாடு குறித்து, மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், தர்மபுரி எஸ்.பி., முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்தப்படும், 25 ஜீப்கள், 6 நெடுஞ்சாலை ரோந்து ஜீப்கள், 6 வேன்கள், ஒரு லாரி, ஒரு பஸ், ஒரு வஜ்ரா வாகனம், ஒரு வருண் வாகனம், 9 பைக், 13 ஸ்கூட்டர் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், இரவு நேர ரோந்தை, 32 பீட்டில் இருந்து, 60 பீட்டாக மாற்றியதில் இருந்து, பெரும்பாலான குற்ற சம்பவங்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், போலீசார் தேசிய நெடுஞ்சாலைகள் முதல், கிராமப்புற சாலைகள் வரை, 24 மணி நேரமும் ரோந்து செல்கின்றனர். இதனால், திருட்டு சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் அவசர உதவி எண், 100 என்ற எண்ணில் வரும் அழைப்புகளை உடனுக்குடன் விசாரிக்க, அதற்கென தனியாக, 4 பொலிரோ ஜீப்கள் வாங்கப்பட உள்ளது.
இதில், பாதிக்கப்பட்ட அல்லது போலீஸ் உதவி தேவைப்படும் நபர்கள் எண், 100ல் தொடர்பு கொண்டவுடன் அவர்கள் இருக்கும் இடத்தை ஜி.பி.எஸ்., உதவியுடன் கண்டறிந்து, சம்பவ இடத்திற்கு சென்று, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வசதி பெருநகரங்களில் மட்டும் இருந்து வந்தது. தற்போது, தர்மபுரி மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், முக்கியமான நிகழ்வுகளில் பாதுகாப்பு மற்றும் தேவைகள் கருதி அதற்கென பிரத்யேகமான, 360 டிகிரியில் சுழலும் கேமராவுடன் கூடிய ஒரு கார் வாங்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், குற்றங்களை தடுக்கவும், புகார்களை உடனுக்குடன் விசாரிக்கவும், உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

