ADDED : மார் 07, 2026 09:33 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சியுடன் எச்.தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி ஆகிய இரண்டு பஞ்.,கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், 2025 - 26ம் ஆண்டு நிதியில், அரூர் நகராட்சியில் குடிநீர் திட்டப் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி, அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சதீஸ் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் இந்திராணி, துணைத் தலைவர் தனபால், நகராட்சி கமிஷனர் ஹேமலதா, கவுன்சிலர்கள் முல்லை ரவி, பூபதி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சந்திரமோகன், தென்னரசு, அரூர் அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சிக்கு உட்பட்ட ஐந்து இடங்களில், ஒன்றரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. தொட்டிகளுக்கு, வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணையில் திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படும். தற்போது, நாள் ஒன்றுக்கு அரூர் நகராட்சியில், 19.5 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், தற்போது, துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, தினமும், 29.5 லட்சம் லிட்டர் குடிநீர் வினியேகாம் செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

