/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்சார வினியோகம் இல்லாததால் தபால் ஓட்டு எண்ணிக்கை தாமதம்
/
மின்சார வினியோகம் இல்லாததால் தபால் ஓட்டு எண்ணிக்கை தாமதம்
மின்சார வினியோகம் இல்லாததால் தபால் ஓட்டு எண்ணிக்கை தாமதம்
மின்சார வினியோகம் இல்லாததால் தபால் ஓட்டு எண்ணிக்கை தாமதம்
ADDED : ஜூன் 05, 2024 05:44 AM
தர்மபுரி : தர்மபுரி தொகுதி தபால் ஓட்டு எண்ணும் மையத்தில், மின்தடை ஏற்பட்டதால், தபால் ஓட்டு எண்ணும் பணி தாமதமானது.
லோக்சபா தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரி, அரூர் (தனி), பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூர் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை, தர்மபுரி அடுத்துள்ள செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் காலை, 8 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தர்மபுரி லோக்சபா தொகுதியில் பதிவான, 10,474 தபால் ஓட்டுகள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. அதை நேற்று காலை, 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, 8 மணிக்கு தபால் எண்ணிக்கை தொடங்குவதற்காக, மாவட்ட கலெக்டர் உட்பட அதிகாரிகள் சென்றனர். அப்போது, மையத்தில் மின்சாரம் இல்லாததால், தபால் ஓட்டு எண்ணிக்கை அரை மணி நேரம் தாமதமானது. அதன் பிறகே, ஓட்டு எண்ணிக்கை
தொடங்கியது.
இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கல்லுாரி வளாகம் வரை, மின்வாரியம் கட்டுப்பாட்டில் மின்சாரம் வழங்கப்பட்டது. ஓட்டு எண்ணும் மையம் முழுவதும், பொதுப்பணி கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பிட்ட மையத்தில் அதிகளவில், 'ஏசி' பயன்பாடு இருந்ததால், ஒரு அறையில் மட்டும் மின்சாரம் வரவில்லை. உடனடியாக அதை சீரமைத்தனர். மேலும், நேற்று காலை முதல் ஜெனரேட்டர் மூலம், வளாகம் முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டது. இதில், மின்வாரியத்தின் தவறுகள் ஏதுவுமில்லை' என்றார்.