/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பூசாரி, செயல் அலுவலரை கண்டித்து போராட்டம்
/
பூசாரி, செயல் அலுவலரை கண்டித்து போராட்டம்
ADDED : டிச 15, 2024 01:29 AM
பென்னாகரம், டிச. 15-
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் பூசாரி மற்றும் செயல் அலுவலரை மாற்றக்கோரி, கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
பென்னாகரம், பி.அக்ரஹகரத்தில் பழமை வாய்ந்த முனியப்பன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலை சுற்றிலும், ஏராளமான கடைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கோவில் முன் பகுதியில் ஆறு போல ஓடும் சாக்கடை நீரை கால்வாய் மூலம் முறைப்படுத்த கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலரின் நிதியில், மூன்று லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு செய்தால், கோவிலின் புனித தன்மை பாதிக்கப்படுவதாக கூறி, செயல் அலுவலர் கண்ணன், பூசாரி சிவலிங்கம் ஆகியோர் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து, அப்பகுதி மக்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவிலுக்கு ஆடு, கோழிகளை நன்கொடையாக வழங்குவதை கணக்கில் காட்டுவதில்லை. பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பணம் மற்றும் பொருட்களை கோவில் பூசாரி முறைகேடாக பயன்படுத்துவதாக கூறி, முனியப்பன் கோவில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் டி.எஸ்.பி., மகாலட்சுமி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார் மற்றும் அறநிலைய துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வரும், 17ம் தேதி இணை ஆணையர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.