ADDED : ஜூலை 10, 2025 01:09 AM
இண்டூர், நல்லம்பள்ளி ஒன்றியம், சோம்பட்டி கிராமத்தில் நேற்று நடந்த, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் சதீஸ் பங்கேற்க வருவதை அறிந்த, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு, சோம்பட்டி - பாப்பாரப்பட்டி சாலையில், நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்கள் பகுதியில் செயல்படும், சந்துகடைகளை அகற்றக்கோரினர். அவர்களிடம் தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, 24 மணி நேரமும் செயல்படும், சந்து கடைகளால், பல குடும்பங்கள் சீரழிகிறது.
போலீசில் புகார் அளித்தால், உங்கள் வீட்டு ஆண்களை குடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என, அறிவுரை கூறி அனுப்புகின்றனர்.
தினக்கூலி வேலைக்கு செல்ல வேண்டிய ஆண்கள் பலர், குடித்து விட்டு சாலையோரம் விழுந்து கிடப்பதால், அவர்களை நம்பி உள்ள பெண்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, எங்கள் பகுதியில் சட்ட விரோத மது விற்பனையை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., காயத்ரி உறுதி அளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர்.