ADDED : ஆக 12, 2025 05:07 AM
தர்மபுரி: தர்மபுரி, விருபாட்சிபுரம் உடுப்பி ஸ்ரீபுத்திகே மடத்தில், ராகவேந்திர சுவாமியின், 354-வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா ஆக., 8ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீபுத்திகே மடாதிபதி சுகுணேந்திர தீர்த்த சுவாமி முன்னிலையில் தொடர்ந்து, கோ பூஜை, சத்யநாராயண சுவாமி பூஜை நடந்தது. தொடர்ந்து, ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, பூர்வ ஆராதனை வழிபாடு நடந்தது. நேற்று, ராகவேந்திர சுவாமிக்கு மத்ய ஆராதனை வழிபாடு நடந்தது.
இதில், 50 தம்பதியினர் பங்கேற்ற கனக பூஜை, ராகவேந்திர சுவாமியின், 1,008 நாமாவளி அர்ச்சனையை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடந்தது. இன்று, உத்ர ஆராதனை, நாளை கணபதி ஹோமம் மற்றும் சுக்ஞானேந்திர தீர்த்தர் ஆராதனை நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
* கிருஷ்ணகிரி பழையபேட்டை, சீதாராம, ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திரர் சுவாமிகளின் ம்ருத்திகா பிருந்தாவன கோவிலில், ராகவேந்திர சுவாமிகளின், 354வது ஆராதனை மஹோத்சவம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, மத்ய ஆராதனை, பஞ்சாமிர்த அபிஷேகம், சஹஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திரர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, ராகவேந்திர ஸ்வாமிகளின் திருவீதி உலா நடந்தது.