/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வனப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்ப கோரிக்கை
/
வனப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்ப கோரிக்கை
ADDED : பிப் 19, 2024 10:27 AM
ஒகேனக்கல்: தண்ணீர் தேடி, வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியேறி வருகின்றன. எனவே, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப, வனத்தையொட்டிய கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், கோடை காலத்திற்கு முன்பே, வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், பருவமழைகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.
இந்நிலையில், தர்மபுரி மாவட்ட வனப்பகுதி ஓடை, ஆறு, குட்டைகள் நீரின்றி வற்றி விட்டன. இதனால் தண்ணீரை தேடி, வனப்பகுதிகளில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி, வனத்தை ஒட்டிய கிராம பகுதிகளுக்கு வருகின்றன. இதனால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே வனப்பகுதிகளில் வனத்துறையினர் அமைத்த தண்ணீர் தொட்டிகள் நீரின்றி வறண்டுள்ளன. இதனால், தண்ணீர் தேடி வனத்திலிருந்து வெளியேறும் யானைகள், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களின் ஏர்வால்வு உள்ள இடத்தில் கசியும் நீரை குடிக்க சாலைக்கு வருகின்றன. இதனால், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப்
பயணிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, ஒகேனக்கல் வனப்பகுதியிலுள்ள ஒட்டப்பட்டி, முண்டச்சிபள்ளம், சின்ன ஆஞ்சநேயர் கோவில் பின்புற தொட்டிகளில், தண்ணீர் நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானைகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க, வனப் பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பினால், யானைகள் மற்றும் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது மற்றும் சாலைகளில் நிற்பதை தடுக்க முடியும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

