ADDED : ஜூலை 22, 2025 02:06 AM
தர்மபுரி, தர்மபுரி டவுன் எஸ்.வி., சாலையை சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., பாலசுப்பிர மணியன், 75. இவர் தன் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் நேற்று மதியம், 12:30 மணிக்கு, சேலம் தர்மபுரி நெடுஞ்சாலையில் செந்தில் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, சாலையோரம் நின்றிருந்த பிக்கப் வாகனத்தில் விற்பனைக்கு வைத்திருந்த வள்ளி கிழங்கு வாங்க நின்றிருந்தார்.
அப்போது, தர்மபுரி நோக்கி வந்த, மஹிந்திரா ஸ்கார்பியோ கார் அருகிலிருந்த வேகத்தடையை கடந்து சென்றபோது, கட்டுபாட்டையிழந்து, சாலையோரம் நின்றிருந்த பாலசுப்பிரமணியன் மற்றும் கிழங்கு வியாபாரியான சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியை சேர்ந்த மணிகண்டன், 48, ஆகியோர் மீது மோதியது. இதில், பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த மணிகண்டனை, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், காரை ஓட்டிவந்த பென்னாகரம் அடுத்த, ஓஜிஹள்ளியை சேர்ந்த கிருஷ்ணன், 55, என்பரை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.