/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பிரதமர் நிகழ்வால் ஓசூரில் சாலைகள் 'வெறிச்'
/
பிரதமர் நிகழ்வால் ஓசூரில் சாலைகள் 'வெறிச்'
ADDED : ஆக 11, 2025 08:27 AM
ஓசூர்: பெங்களூருவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி நடந்ததால், தமிழக எல்லையான ஓசூரில் நேற்று காலை முதல் மதியம் வரை, ஆங்காங்கு லாரிகள் நிறுத்தப்பட்டன. இதனால் ஓசூரில் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழக எல்லை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக, கர்நாடகாவிற்கு செல்லும் கனரக வாகனங்கள், அம்மாநில எல்லையான அத்திப்பள்ளியை அடைந்து, அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டி வழியாக, பெங்களூரு மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும். பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். இதனால் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் மீது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதேபோல் கர்நாடகாவிற்குள் காலை, 9:30 முதல், மதியம், 2:30 மணி வரை கனரக வாகனங்கள் வர வேண்டாம் என தகவல் வெளியானது.
இதனால் தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்ல வேண்டிய லாரிகள், ஓசூர் நகர் மற்றும் இ.எஸ்.ஐ., ரிங்ரோட்டில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கர்நாடகா நோக்கி நேற்று காலை முதல் லாரிகள் வராததால், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடியது.அதேபோல் கர்நாடகா செல்ல வேண்டிய லாரிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மதியம், 2:30 மணிக்கு மேல், 5 மணி நேரத்திற்கு பின் கர்நாடகாவிற்குள் லாரிகள் செல்ல துவங்கின. அரசு பஸ்கள், இலகு ரக வாகனங்கள் வழக்கம்போல் கர்நாடகாவுக்கு சென்றன.