/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்
/
சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்
ADDED : பிப் 17, 2024 12:34 PM
ரூ.23 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் வாரச்சந்தைக்கு நேற்று, 240க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,500 முதல், 6,800 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில், 23 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நிவாரணம் வழங்க ஆர்.டி.ஓ., விசாரணை
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் விபத்தில் உயிரிழந்தவர்கள், கொடுங்காயம், லேசான காயம் அடைந்தவர்கள் அவர்களுக்கான அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் இறந்தவர்களின் வாரிசுகள், காயமுற்ற, 12 பேரிடம் விசாரணை நடத்தினார். இறந்தவர்களின் வாரிசுகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய், கொடுங்காயம் அடைந்தவர்களுக்கு, 50,000 ரூபாய், லேசான காயம் அடைந்தவர்களுக்கு, 30,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதேபோன்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் வேண்டி மனு செய்த, 57 பேரிடம் விசாரணை மேற்கொண்டார்.தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் பெருமாள், தலைமையிடத்து துணை தாசில்தார் ஞானபாரதி மற்றும் ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.
பல்நோக்கு கட்டடம் திறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, பாலாஜி நகரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டது. இதை பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.முக., எம்.எல்.ஏ., கோவிந்தசாமி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி, மெணசி, அரசு ஆண்கள், பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும், 243 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.கோபாலாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், அ.தி.மு.க., நிர்வாகிகள் ராஜேந்திரன், நல்லத்தம்பி, பெரியகண்ணு, சேகர், தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம்
தர்மபுரி: அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுருளி நாதன் தலைமை வகித்தார், மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.