/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்டம்: சில வரி செய்திகள்
/
தர்மபுரி மாவட்டம்: சில வரி செய்திகள்
ADDED : பிப் 17, 2024 12:44 PM
சங்கல்தோப்பு தர்கா உண்டியலில் ரூ.13.90 லட்சம் காணிக்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சங்கல்தோப்பு தர்கா உள்ளது. உண்டியல்களின் காணிக்கை தொகையில், 7 சதவீதம் வக்பு வாரியத்திற்கு செல்கிறது.
இந்நிலையில் கடந்த, 14ல் சங்கல்தோப்பு தர்காவின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது. தர்கா கமிட்டி தலைவர் நவாப் துவக்கி வைத்தார். வக்பு வாரிய சேலம் சரக கண்காணிப்பாளர் பாபு முன்னிலை வகித்தார். இரு நாட்கள் நடந்த உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம் இரவு முடிந்தது. இதில், 13 லட்சத்து, 90 ஆயிரத்து, 889 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். வக்பு வாரிய ஆர்.ஐ., கஜேந்திரன், ஆய்வாளர் சையது வாஜித், தாசில்தார் சபியுன்னிசா, ஜமாத் தலைவர்கள் கவுஸ் ஷெரீப், ஜாவித் ஆகியோர் உடனிருந்தனர்.
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் அருள், 43, அரசு பஸ் கண்டக்டர். கடந்த, 15 மாலை அரூரில் இருந்து, கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அரசு பஸ்சில் பணியில் இருந்துள்ளார். கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில், தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் பஸ் வந்தபோது, அவ்வழியில் சென்ற இருவர் பஸ் மீது கற்களை வீசியதில் பஸ் கண்ணாடி உடைந்தது. கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பைக் மோதி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மோரமடுகு பாரதி நகரை சேர்ந்தவர் ரங்கன், 51, கூலித் தொழிலாளி. இவர் கடந்த, 14 மாலை மோரமடுகு கூட் ரோடு அருகில் கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஹீரோ ஸ்பிளண்டர் பைக் மோதியதில் ரங்கன் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மாடு திருட முயன்றவர் கைது
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நேருநகர் விரிவாக்கம், 7 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 28, டிரைவர்; இவர் நேற்று முன்தினம் காலை, மேய்ச்சலுக்காக தனது மாட்டை அப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே கட்டி வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர், மாட்டை திருடி செல்ல முயன்றார். இதை கவனித்த மணிகண்டன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன், மர்ம நபரை பிடித்து, ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த சிவக்குமார், 24, என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் அருகே இருவர் மாயம்
ஓசூர்: ஓசூர் அருகே குமுதேப்பள்ளி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சரகோஜி, 50. கடந்த மாதம், 1 காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மனைவி விஜயலட்சுமி, 48, கொடுத்த புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரித்தேஷ்குமார் சவுகான், 26. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தனப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; கடந்த, 11 இரவு, கர்நாடகா மாநிலம், பல்லுாரில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக, சிப்காட் பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கியவர், அங்கிருந்து நண்பர் வீட்டிற்கு செல்லாமல் மாயமானார். அவரது அண்ணன் மிதேஷ்குமார் சவுகான், 28, கொடுத்த புகார்படி, சிப்காட் போலீசார் தேடுகின்றனர்.
மின் ஒயர் அறுந்து விழுந்து மூன்று பசுமாடுகள் பலி
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, மேட்டுபுலியூர், சாராகாரனுார் கிராமத்தை சேர்ந்தவர் மாது, 45, குமரேசன், 39, ஆகியோர் அதே பகுதியில் கறவை மாடுகளை பராமரித்து வருகின்றனர். நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு, வந்து பார்த்தபோது, மின் ஒயர் அறுந்து மாட்டின் மீது விழுந்ததில், இரண்டு பசுமாடுகள், ஒரு கன்று உள்ளிட்டவை இறந்தது. மின் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, இறந்த கறவை மாடுகளை மீட்டனர்.
மர்ம விலங்கு கடித்து ஒன்பது ஆடுகள் பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, ஏ.செட்டிப்பள்ளி அருகே தின்னுாரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி நாராயணம்மா, 46. வீட்டின் அருகே கொட்டகை அமைத்து, 20 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு துாங்க சென்றார். நேற்று காலை, 5:30 மணிக்கு பார்த்த போது, மர்ம விலங்கு கடித்ததில் ஒன்பது ஆடுகள் இறந்து கிடந்தன. ஐந்துஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தன. ஆறு ஆடுகளுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது.
அத்திமுகம் கால்நடை மருத்துவர் ஆடுகளுக்கு சிகிச்சையளித்தார். கொட்டகைக்குள் சிறுத்தை புகுந்து ஆடுகளை கடித்து கொன்று இறைச்சியை சாப்பிட்டதா அல்லது நாய்கள் கூட்டம் கடித்து கொன்றதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. உயிரிழந்த ஆடுகளுக்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.