ADDED : ஆக 12, 2024 06:38 AM
தர்தர்மபுரி: ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், அவதரித்த சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா, தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள அன்னை சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சன்னதியில் நேற்று நடந்தது.
இதில், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தன. விழாவையொட்டி, சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பெண் பக்தர்கள் தேவாரம் பாடினர். பின்னர், சுந்தரமூர்த்தி நாயனார் யானை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன் பிறகு, ஆனந்த நடராஜர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சோடச உபசாரம், வேத பாராயணம், பஞ்ச புராண பாராயணம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தன. அதேபோல், நல்லம்பள்ளி அடுத்த, தம்மணம்பட்டியிலுள்ள அழகானந்த சுவாமிகள் மற்றும் மாணிக்கவாசகர் திருமடத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நேற்று நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.