/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு மட்டும் தான்; மக்களுக்கான தீர்வு இல்லை
/
தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு மட்டும் தான்; மக்களுக்கான தீர்வு இல்லை
தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு மட்டும் தான்; மக்களுக்கான தீர்வு இல்லை
தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு மட்டும் தான்; மக்களுக்கான தீர்வு இல்லை
ADDED : பிப் 20, 2024 10:22 AM
தர்மபுரி: தமிழக சட்டசபையில் நேற்று, 2024 -- 25ம் ஆண்டுக்கான, தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து, பல்வேறு தரப்பு மக்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
ஆர்.செல்வம், 39, மொபைல்போன் கடை உரிமையாளர், இண்டூர்: குடிசை வீடற்ற நிலையை ஏற்படுத்த கான்கிரீட் வீடுகள் திட்டம் வரவேற்கக் கூடியது. அதை சரியான பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இன்னும், குடிசை வீடுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களுக்காக அரசு அறிவித்த திட்டங்கள் சென்றடையவில்லை. பெண்களுக்கான இலவச பஸ் பயணம் விரிவாக்கம் செய்யும் திட்டம் சிறப்பானது. பஸ் வசதி இல்லாத இடத்தில் இதனால் என்ன பயன். அரசு அறிவிக்கும் திட்டங்கள் கவர்ச்சிகரமாக மட்டும் தான் உள்ளது. பயனளிக்க கூடியதாக இல்லை.
பெ.குப்பன், 36, தனியார் நிறுவன ஊழியர், சேஷம்பட்டி: ஒரு லட்சம் மாணவர்களுக்கு, 2,500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். கடந்த, 2 ஆண்டுகளாக, உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, வங்கிகள் கல்விக்கடனை வழங்காமல் நிறுத்தி உள்ளனர். மேலும், கல்விக்கடனை மிரட்டி வசூல் செய்யும் நிலையும் உள்ளது. இது குறித்து, நடவடிக்கை எடுக்காமல் 2 ஆண்டுகள், தமிழக அரசு மெத்தனம் காட்டியது.
பி.கே.சிவா, 60, சமூக ஆர்வலர், பாலக்கோடு: தி.மு.க., ஆட்சியில் பட்ஜெட் கூட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு அனைத்தும் வெற்று அறிவிப்பாக உள்ளது. அவை நடைமுறைக்கு வருவதில்லை. இதுவரை அறிவித்த கான்கிரீட் வீடுகள், இலவச வீட்டுமனை பட்டா, கல்வி கடன் உள்ளிட்ட எதுவுமே கடந்த ஆண்டுகளில், தி.மு.க., அரசு வழங்கவில்லை. இப்போதும் அறிவித்துள்ளவை பெயரளவில் வெளியிட்ட அறிவிப்புகள் தான், ஒட்டுமொத்தமாக இது, நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் அளிக்காத பட்ஜெட்.
அ.ரங்கநாதன், 32, தனியார் நிறுவன ஊழியர், தர்மபுரி: கடந்த, 2 ஆண்டுகளாக கல்விக்கடன் வழங்காமல் காலம் கடத்திய மாணவர்களுக்கு, தற்போது கல்விக்கடன் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான், ஏழை, நடுத்தர மக்களுக்கும் பயன்தரும் பட்ஜெட்டாக அமையும். தமிழகத்தின் கடன் தொகை, 8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இலவச அறிவிப்புகளால் தேவையற்ற கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
டி.ஏகம்பவாணன், 62, மாநில செயற்குழு உறுப்பினர், சிறு குறு தொழிற்சங்கம், கிருஷ்ணகிரி: சிறு குறு தொழில்களுக்கு 1,557 கோடி ரூபாய், ஜவுளித்துறைக்கு, 500 கோடி ரூபாய், புதிய டைடல் பார்க்குகள், 2 ஆண்டுகளில், 50,000 இளைஞர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்க தக்கவை. சிப்காட் தொழிற்பேட்டை அறிவித்து செயல்படுத்தப்படும் இடங்களில், குறிப்பிட்ட அளவு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனங்களுக்கும் (சிட்கோ) இடமளித்தால், சிறு குறு தொழில்களுக்கு ஊக்கமாக இருந்திருக்கும். அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வர்த்தக மையம் அமைக்கப்படும் என அறிவித்த நிலையில், நடப்பாண்டிலேயே அதை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். மற்றபடி குறைகள் பெரிதாக இல்லாத பட்ஜெட்.
கே.மகேஷ், 49, தலைவர், கிருஷ்ணகிரி கிரானைட் உற்பத்தியாளர்கள் சங்கம், கிருஷ்ணகிரி: பட்ஜெட்டில் சிப்காட், சிட்கோ அறிவிப்புகள் இருந்தாலும் சிறிய தொழிற்சாலைகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் இல்லை. 500க்கும் மேற்பட்டோருக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு, 10 சதவீத ஊதிய மானியம் என கூறுகின்றனர். அதுவும் பெரிய நிறுவனங்களுக்கே உதவியாக இருக்கும். சிறு குறு தொழிற்சாலைகளுக்கு மின்வாரியத்தில் 'பிக்சிடு மினிமம் டிமாண்ட் ஜார்ஜ்' தொகையை உயர்த்தியதை குறைப்பு அறிவிப்பு இடம்பெறவில்லை.
எம்.குட்டிகணேஷ், 23, முதுகலை 2ம் ஆண்டு மாணவர், அரசு ஆடவர் கலைக்கல்லுாரி, கிருஷ்ணகிரி: தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ள, 'தமிழ் புதல்வன்' திட்டத்தை வரவேற்கிறேன். அரசு பள்ளிகளில் பயின்று, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வங்கி கணக்கில் அளிக்கும், 'தமிழ் புதல்வன்' திட்டம் சிறப்பானது. இதனால், 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
ஆர்.துரை, 73, தலைவர், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு: மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் அறிவிப்பு இல்லை. 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர். அதுவும் இல்லை. பெருநகரங்களை மட்டுமே குறி வைத்து பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது. சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைப்பட்ச ஓய்வூதிய அறிவிப்பு இல்லை. இது மூத்த குடிமக்களுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்.
எஸ்.மூர்த்தி, 58, தலைவர், ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா): ஓசூருக்கு நீண்ட நாட்களாக கேட்டு வரும் வர்த்தக மையம், சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கான நலவாரியம், எளிமைப்படுத்தப்பட்ட உரிமம், பெண்கள் விடுதி போன்ற அறிவிப்புகள் இல்லை. மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனாலும், மின்கட்டண உயர்வை திரும்ப பெறுவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை.

