/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., வேண்டாமென தமிழக மக்கள் முடிவு
/
தி.மு.க., வேண்டாமென தமிழக மக்கள் முடிவு
ADDED : ஜன 09, 2024 10:35 AM
அரூர்: ''தமிழகத்தில், தி.மு.க., வேண்டாம் என, மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
தர்மபுரி மாவட்டம், அரூரில், 'என் மண், என் மக்கள்' யாத்திரையில் நேற்று பங்கேற்ற அவர் பேசியதாவது:
தர்மபுரி, எம்.பி.,யை யாராவது பார்த்து இருக்கிறீர்களா, உங்க எம்.பி.,யை இப்ப இங்க அரூருக்கு வர வைக்க முடியும். ஒன்றுமில்லை, அரூரில் ஒரு பூமி பூஜை போட்டு சூடத்தை பற்ற வைத்தால், கிளம்பி வந்து விடுவார். வழிபாட்டு முறைகளுக்கு எதிராக இருக்க கூடிய, எம்.பி., தர்மபுரியில் இருக்கிறார். வடமாநிலங்களில் இருக்க கூடிய மக்கள் மாட்டு கோமியத்தை குடிப்பவர்கள் என, தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., லோக்சபாவில் பேசுகிறார்.
ஆனால், அவரது மகன் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார். தர்மபுரி தொகுதியில் யார் நின்றாலும் பிரதமர் மோடி நிற்பதாக கருதி தேர்தல் பணி செய்ய வேண்டும். 6 மாதமாக நடக்கும் யாத்திரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் மனுக்களை அளிக்கின்றனர்.
தமிழகத்தில் மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். தீய சக்தி திராவிட முன்னேற்ற கழகம் வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்கள். அரூரில், 1,000 ஆண்டு வரலாறு கொண்ட வர்ணீஸ்வரர் கோவில் இருக்ககூடிய மண். தமிழகத்தில் இரண்டு இடங்களில் ராமபிரான் சிவபூஜை செய்தார். ஒன்று ராமேஸ்வரம், மற்றொன்று தீர்த்தகிரீஸ்வரர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கொட்டும் மழையில்
கொட்டும் மழையில், இரவு, 8:15 மணிக்கு அரூர், 4 ரோட்டில் யாத்திரையை துவங்கிய அண்ணாமலை, அரை கி.மீ., துாரமுள்ள கச்சேரிமேட்டிற்கு, வந்து சேருவதற்கு, 9:00 மணியானது ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சாலையின் இருபுறங்களிலும் நின்று பூக்கள் துாவி சால்வை, சந்தனமாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். குழந்தைகளுக்கு அண்ணாமலை சால்வை அணிவித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். கச்சேரிமேட்டில் மழை பெய்த போதிலும் அவர் பேசி முடிக்கும் வரை மக்கள் கலையாமல் இருந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
முன்னதாக, பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த, 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தில் அண்ணாமலை பேசுகையில், '' பிரதமர் நரேந்திரமோடி, 500 நாட்களில், 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணிகளை வழங்கி உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் இந்தியாவில் மோடியை தவிர, தகுதியான பிரதமர் வேட்பாளர் யாரும் இல்லை. தர்மபுரி மாவட்டத்தில், விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தில், 1.84 லட்சம் விவசாயிகளுக்கு, 15 தவணைகளில் ஆண்டுக்கு, 6,000 ரூபாய், பிரதம மந்திரி விவசாய நிதி திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இளைஞர்கள் வாக்குவாதம்
பி.பள்ளிபட்டியில் உள்ள புனித லுார்து அன்னை மாதா ஆலயத்தில் மாதா சிலைக்கு மாலை அணிவிக்க அண்ணாமலை சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்ணாமலை மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, மணிப்பூர் மாநில கலவரம் குறித்து, இளைஞர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அண்ணாமலை இரு பழங்குடியினர் இடையே நடந்த தகராறு என, விளக்கம் அளித்தார். அதன் பின், மாதா சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து, வணங்கி சென்றார்.