UPDATED : ஆக 20, 2025 10:17 AM
ADDED : ஆக 20, 2025 09:06 AM

சென்னை: திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவாரூரில் ஹிந்து முன்னணி தலைவர் ராமலிங்கம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த முகமது அலி ஜின்னா 2024ல் பூம்பாறையில் தேசிய புலனாய்வு முகமையினரால் கைது செய்யப்பட்டார். அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக அவருடைய வங்கி பண பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 20) காலை 6:00 மணி முதல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் உள்ள முகமது யாசின் என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வத்தலக்குண்டு காந்திநகர் விரிவாக்க பகுதியில் முகமது அலி ஜின்னாவின் மாமனார் உமர் கத்தாப் குடியிருக்கும் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தினர். தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி., சம்சுதீன் தலைமையிலான அதிகாரிகளும் திண்டுக்கல் பேங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
கொடைக்கானலில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், வத்தலக்குண்டு, பேகம்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.