/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்
/
வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 23, 2024 04:29 AM
தர்மபுரி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், 10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி, பணியை புறக்கணித்து, தர்மபுரி தாசில்தார் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் நாகவேணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜிவ்காந்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில், துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும்.
இளநிலை வருவாய் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின், பெயர் மாற்ற அரசாணை அடிப்படையில் விதி திருத்த ஆணையை வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின், பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் அல்லது தனி ஊதியம் வழங்க வேண்டும்.
இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் ஆகியோருக்கிடையே, ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து வட்டங்களிலும், சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு, வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட கிளை தலைவர், மண்டல துணை தாசில்தார் கம்ருதீன் தலைமையில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் மில்லர், தலைமையிடத்து துணை தாசில்தார் ஞானபாரதி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.