ADDED : நவ 21, 2026 04:59 AM
சர்வீஸ் சாலையில் கவிழ்ந்த லாரி
வாகன போக்குவரத்து பாதிப்பு
ஓசூர்: தமிழக எல்லையான ஓசூரிலிருந்து, கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள குமுதேப்பள்ளி பகுதியில், அசோக் லேலண்ட் யூனிட் - 2 நிறுவனம் இயங்குகிறது.
இங்கு, கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியிலிருந்து லாரிகள் தயாரிக்க பயன்படும் உதிரிபாகனங்கள் ஈச்சர் லாரியில் நேற்று கொண்டு வரப்பட்டன. அவற்றை நிறுவனத்தில் இறக்குவதற்காக, குமுதேப்பள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மதியம், 3:00 மணிக்கு, டிரைவர் லாரியை ஓட்டி சென்றார்.நிறுவனத்தின் முன், சர்வீஸ் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதிவேகமாக டிரைவர் சென்றதால், லாரி கட்டுப்பாட்டை இழந்து, குமுதேப்பள்ளி மேம்பால சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில், டிரைவர் தலையில் காயமடைந்து, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நிறுவனத்தின் உதிரிபாகங்கள் சர்வீஸ் சாலையில் சிதறி கிடந்தன. இதனால், அவ்வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
