ADDED : பிப் 12, 2025 07:08 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் வழியாக, காரில் புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக, பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் படி, காரிமங்கலம் அடுத்துள்ள அடிலம் பிரிவு சாலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு காரிமங்கலம் எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அவ்வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த கிரெட்டா காரை, போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஒரு டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த மகேஷா, 24, ரேவந்த், 26, ஆகியோரை விசாரித்ததில், கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து போலீசார், இருவரையும் கைது செய்தனர்.