/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விநாயகர் சிலை கரைப்பில்இரு தரப்பினர் மோதல்
/
விநாயகர் சிலை கரைப்பில்இரு தரப்பினர் மோதல்
ADDED : செப் 01, 2025 02:24 AM
ஓசூர்;ஓசூர் அருகே, விநாயகர் சிலை கரைப்பதற்கு முன், கோவிலில் பூஜை செய்ய முயன்றபோது, இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஊர்மக்கள் சார்பில் ஐந்து சிலைகளும், மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் ஒரு சிலை என ஆறு சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். நேற்று சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். ஊர் நடுவிலுள்ள கோவிலில் சிலைக்கு பூஜை செய்த பின் நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பது வழக்கம்.
மற்றொரு தரப்பு இளைஞர்கள், கோவில் முன் விநாயகர் சிலைகளை நிறுத்தி பூஜை செய்ய முயன்றனர். அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். மற்றொரு தரப்பை சேர்ந்த தினேஷ், ரமேஷ், சதீஷ், நந்தகுமார், பிரவீன்குமார், விபுன்குமார் என ஆறு பேரும், ஊர்மக்கள் தரப்பில் பூவரசு, குணா, சுரேந்தர் என மூவரும் காயமடைந்தனர். அவர்களுக்கு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மற்றொரு தரப்பினர் வைத்திருந்த விநாயகர் சிலை உடைக்கப்பட்டதால் பெரிய அளவில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த ஊர்மக்கள் தரப்பை சேர்ந்த சுரேந்தர், துாக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை மீட்ட மக்கள், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்பிரச்னையால் இரு தரப்பினரும் விநாயகர் சிலையை கரைக்காமல் போட்டு சென்றனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மீட்டு, நீர்நிலைகளில் கரைத்தனர். இச்சம்பவங்கள் தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.