/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெளியூர் சென்ற வாக்காளரை கவனத்தில் கொள்ள வலியுறுத்தல்
/
வெளியூர் சென்ற வாக்காளரை கவனத்தில் கொள்ள வலியுறுத்தல்
வெளியூர் சென்ற வாக்காளரை கவனத்தில் கொள்ள வலியுறுத்தல்
வெளியூர் சென்ற வாக்காளரை கவனத்தில் கொள்ள வலியுறுத்தல்
ADDED : அக் 30, 2025 01:31 AM
தர்மபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, அங்கீகரிக்கப்ட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமையில் நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி,- பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ள, இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சதீஷ் தலைமையில், அங்கீகரிக்கப்ட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும், எஸ்.ஐ.ஆர்., முறை குறித்து, அரசியல் கட்சியினருக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், வாக்காளர் கணக்கெடுப்பு பணி காலம் நவ., 4 முதல், டிச.,4 வரை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் டிச., 9, ஆட்சேபனை மற்றும் முறையீட்டு காலம், டிச., 9 முதல், 2026 ஜன., 8 வரை, 2026 பிப்., 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும், தர்மபுரி மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள, 1,501 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இப்பணியில் முழுமையாக ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இதில், அ.தி.மு.க., சார்பில் பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் பேசுகையில், ''தர்மபுரி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் பல்வேறு வேலைகளுக்கு சென்றுள்ளனர். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், வாக்காளர் பெயர் தீவிர சுருக்கத்தின் போது, அவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இருப்பதை, மாவட்ட தேர்தல் அலுவலர், கவனத்தில் கொள்ள வேண்டும்,'' என்றார்.
நா.த.க., சார்பில், வெளி மாநிலத்தவரை, தமிழகத்திலுள்ள வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்க கூடாது. மேலும், வாக்காளர் தீவிர வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்த பணியின்போது, அதற்கான விண்ணப்பங்களை, தமிழில் அச்சிட்டு வழங்க வலியுறுத்தினர்.
மா.கம்யூ., சார்பில், ஏற்கனவே ஆண்டுக்கு ஒரு முறை நடந்து வரும் பெயர் நீக்கல், சேர்த்தல் சிறப்பு முகம் போதுமானது. சிறப்பு தீவிர திருத்த பணிகள் தேவையற்ற ஒன்று. இதனால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதை முற்றிலும் கைவிட தெரிவித்தனர்.
இதில், டி.ஆர்.ஓ., கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, ஆர்.டி.ஓ.,க்கள் காயத்ரி, செம்மலை உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் தலைமை வகித்தார்.

