/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தென்பெண்ணையாற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர் நிரப்ப வலியுறுத்தல்
/
தென்பெண்ணையாற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர் நிரப்ப வலியுறுத்தல்
தென்பெண்ணையாற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர் நிரப்ப வலியுறுத்தல்
தென்பெண்ணையாற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர் நிரப்ப வலியுறுத்தல்
ADDED : செப் 22, 2025 02:02 AM
அரூர்:தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் சேமிப்பு மற்றும் பயன்படுத்துவோர்- அரூர் விவசாய நலச் சங்கம் சார்பில், தென்பெண்ணையாற்றின் உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்புவதற்கான கவன ஈர்ப்பு ஆலோசனை கூட்டம், தர்மபுரி மாவட்டம், எச்.ஈச்சம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் பொருளாளர் திருமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், ராமமூர்த்தி, இளவரசன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அழகு துரை, அருணாச்சலம், புத்தன், தனசேகரன், அன்பழகன், பொன்னுசாமி, மாதேஸ்வரி மணி உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், எம்.வெளாம்பட்டி, மருதிப்பட்டி, கீழ் மொரப்பூர், வடுகப்பட்டி, எச்.அக்ரஹாரம், மோப்பிரிப்பட்டி, செல்லம்பட்டி, கே.வேட்ரப்பட்டி, கொங்கவேம்பு, மாம்பட்டி, மத்தியம்பட்டி, செட்ரப்பட்டி ஆகிய, 12 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.
ஏற்கனவே, இது குறித்து, 3 முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டும், திட்டம் கிடப்பில் உள்ளதை உடனடியாக நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் அனுமன்தீர்த்தத்தில் இருந்து, அரூர் வரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் கவன ஈர்ப்பு பேரணி நடத்துவது, இந்த பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் விவசாயிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.