ADDED : ஏப் 17, 2025 01:53 AM
கிருஷ்ணகிரி:பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பல ஆண்டுகளாக ஒப்படைக்காத தமிழக அரசை கண்டித்து, காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில், கிழக்கு மாவட்ட, வி.சி., கட்சி சார்பில், நேற்று நில மீட்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமை வகித்தார்.
இதில் கடந்த, 1992-ல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில், மலையாண்டஹள்ளி கிராமத்தில் வீடில்லாத பட்டியலின மக்கள், 53 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அறிவித்தனர். 25 பேருக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
மீதமுள்ள, 28 பேருக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்டு ஒதுக்கீடு செய்த பட்டியலின மக்களுக்கு வழங்க, பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில், தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.