/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வத்தல்மலைக்கு மாற்றுச்சாலை அமைக்க மலைக்கிராம மக்கள் வேண்டுகோள்
/
வத்தல்மலைக்கு மாற்றுச்சாலை அமைக்க மலைக்கிராம மக்கள் வேண்டுகோள்
வத்தல்மலைக்கு மாற்றுச்சாலை அமைக்க மலைக்கிராம மக்கள் வேண்டுகோள்
வத்தல்மலைக்கு மாற்றுச்சாலை அமைக்க மலைக்கிராம மக்கள் வேண்டுகோள்
ADDED : பிப் 10, 2025 01:36 AM
வத்தல்மலை: தர்மபுரி மாவட்டத்திலுள்ள வத்தல்மலையில் பால்சிலம்பு, சின்னாங்காடு, ஒன்றியங்காடு, பெரியூர், நாயக்கனுார் உட்பட, 10 மலை கிராமங்களில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், பால்சிலம்பு கிராமம் மட்டும் கடத்துார் ஒன்றியம் சுங்கரஹள்ளி பஞ்.,க்கு உட்பட்டது. மற்ற கிராமங்கள் தர்மபுரி ஒன்றியம், கொண்டகரஹள்ளி பஞ்.,க்கு உட்பட்டது. இதில், வத்தல்மலை கிராமங்களுக்கான பிரதான சாலையாக, தர்மபுரியில் இருந்து கொமத்தம்பட்டி வழியாக செல்லும் சாலை உள்ளது. இதை தவிர மாற்று வழித்தடங்கள் இல்லாததால், மழை மற்றும் மண் சரிவு சமயத்தில் போக்குவரத்து துண்டிக்கபடுகிறது. இதனால், மாற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, பால்சிலம்பு பகுதியை சேர்ந்த பரமசிவம், 55, கூறுகை யில், ''வத்தல்மலையிலுள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மாணவர்கள் கல்லுாரி செல்ல, 25 கி.மீ., தொலைவிலுள்ள தர்மபுரிக்கு வர வேண்டியுள்ளது. அதேபோல், மருத்துவ உயர் சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கும் தர்மபுரி வரவேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், வத்தல்மலை - தர்மபுரி பிரதான சாலை மழைக்காலங்களில் பலத்த சேதமடையும்போது, அச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. கடந்த, 10 ஆண்டுக்கு முன், பால்சிலம்பு பகுதியில் உள்ள மக்கள் இணைந்து, பால்சிலம்பு முதல் சுங்கரஹள்ளிக்கு பொக்லைன் மூலம் மண் சாலை அமைத்தோம். இதில், கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் அபாயகரமான பகுதிகள் எதுவும் கிடையாது. பணிகள் இறுதி கட்டத்தை எட்டும்போது, வனத்துறையினர் அந்த சாலைக்கு அனுமதி மறுத்து விட்டனர்,'' என்றார்.
பால்சிலம்பு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் காவேரி, 72, கூறு கையில், ''கடந்த ஆண்டு டிச., 1ல் வத்தல்மலையில் கொட்டி தீர்த்த கன மழையால், சாலையில் மண்சரிவு மற்றும் தரை பாலம் அடித்து செல்லப்பட்டதால், 5 நாட்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதில், பெரியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்ததால், முதலுதவி சிகிச்சைக்கு பயன்படுத்தி கொண்டோம். மகப்பேறு மற்றும் இதர தேவைகளுக்கு மலையை விட்டு வெளியில் செல்லமுடியவில்லை. இதில், சுற்றுலா வரும் பயணிகளும் பாதிக்கப்படுவதால், வத்தல்மலைக்கு மாற்று சாலைக்கான தேவை ஏற்பட்டுள்ளது. எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில், பால்சிலம்பு பகுதியில் இருந்து, 5 கி.மீ., தொலைவிலுள்ள சுங்கரஹள்ளிக்கு சாலை அமைப்பது எளிதானது. அங்கிருந்து பொம்மிடி உட்பட அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் செல்லலாம். பொதுமக்கள் அமைத்து, பாதியில் கைவிடப்பட்ட மண் சாலையை தார்ச்சாலையாக அமைக்க, அரசு முன்வர வேண்டும். மேலும், இங்குள்ள மக்கள் பஞ்., அலுவலகம் செல்ல, 30 கி.மீ., செல்லவேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, வத்தல்மலையிலுள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து மக்கள் தொகை அடிப்படையில், தனி பஞ், அமைக்க வேண்டும்,'' என்றார்.

